நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96.23 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96.23 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தில் 15-வது இடத்தை பிடித்தது.
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96.23 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
Published on

நெல்லை,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நெல்லை மாவட்ட தேர்வு முடிவுகளை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 492 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 42 ஆயிரத்து 676 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 41 ஆயிரத்து 68 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் 19 ஆயிரத்து 871 மாணவர்களும், 21 ஆயிரத்து 197 மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 96.23 சதவீதம் ஆகும். நெல்லை மாவட்டம் மாநில அளவில் 15-வது இடத்தை பிடித்துள்ளது.

மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்வு எழுதி உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு மாநில அளவில் நெல்லை மாவட்டம் 11-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 15-வது இடத்துக்கு சென்று உள்ளது. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 96.15 சதவீதமாக இருந்தது 96.23 சதவீதமாக அதிகரித்து உள்ளது. ஆனால் மாநில அளவில் குறைந்து உள்ளது. இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறினார்.

பேட்டியின் போது, நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா, மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகா (நெல்லை), சீனிவாசன் (தென்காசி), விஜயலட்சுமி (வள்ளியூர்), சம்பத்குமார் (சங்கரன்கோவில்), சுடலை (சேரன்மாதேவி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நாராயணன், குழந்தை தொழிலாளர் நல அலுவலர் சந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com