ஊராட்சி சபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

‘‘ஊராட்சி சபை கூட்டம் என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார்’’ என்று துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஊராட்சி சபை கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் நாடகம் நடத்துகிறார் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Published on

மதுரை,

துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். 1977ம் ஆண்டு கட்சியை தொடங்கி, 3 முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்தார். அப்போது அவரது ஆட்சியை யாராலும் அகற்ற முடியவில்லை. மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா, பல தேர்தல்களில் வெற்றி பெற்று 18 ஆண்டுகள் முதல்அமைச்சராக இருந்தார். இதன் மூலம் 28 ஆண்டு காலம் தமிழகத்தில் ஆட்சி செய்யக் கூடிய உரிமையை பெற்று, இன்றும் ஆட்சி நடத்தும் கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. பிறகு எப்படி அரசியல் விபத்தினால் ஆட்சி நடத்தும் கட்சியாக இருக்கும்?

சுதந்திரத்திற்கு பின் தமிழக அரசியலில் 28 ஆண்டு காலம் ஆட்சி செய்து மீண்டும் ஆட்சியை நிறுவிய ஒரே இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான்.

கலெக்டர்கள் தலைமையில் மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறோம். இது நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் புதிதாக ஊராட்சி சபை கூட்டம் நடத்தி, ஓர் கண்துடைப்பு நாடகம் நடத்துகிறார்.

தி.மு.க. ஆட்சியில் ஸ்டாலின் துணை முதல்அமைச்சர், உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர். அப்போது அவர் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்தாமல் தற்போது தேர்தல் பலனை எதிர்பார்த்து நடத்தி வருகிறார். இது எந்த பலனையும் அவருக்கு தராது. அவரது எண்ணம் வெற்றி பெறாது.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேசிய மற்றும் மாநில கட்சிகளுடன் பேசி வருகிறோம். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சரியான நேரத்தில் முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com