முகநூலில் போலி கணக்கு தொடங்கி ஓ.பன்னீர்செல்வம் மகன் பெயரில் பணம் பறிக்க முயற்சி பரபரப்பு தகவல்

ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் பெயரில் மர்ம நபர்கள் போலி முகநூல் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகநூலில் போலி கணக்கு தொடங்கி ஓ.பன்னீர்செல்வம் மகன் பெயரில் பணம் பறிக்க முயற்சி பரபரப்பு தகவல்
Published on

தேனி:

தமிழக முன்னாள் துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் வி.ப.ஜெயபிரதீப். இவர் பெரியகுளம் அருகே உள்ள கைலாசநாதர் கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக்குழு தலைவராக உள்ளார். இவர் தனது பெயரில் முகநூல் கணக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் அவருடைய பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் போலியான முகநூல் கணக்கு தொடங்கியுள்ளனர். அவருடைய முகநூல் கணக்கில் உள்ள நண்பர்களுக்கு இந்த போலியான கணக்கு மூலம் நட்பு அழைப்பு விடுத்துள்ளனர். அதை பலரும் ஏற்றுக் கொண்டு போலி கணக்கு என தெரியாமல் அதில் நண்பர்களாக இணைந்தனர்.

பணம் பறிக்க முயற்சி

பின்னர் அந்த போலி கணக்கில் இருந்து வி.ப.ஜெயபிரதீப்பின் நண்பர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலருக்கு குறுஞ்செய்திகள் வந்தன. அதில் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறிய மர்ம நபர் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் செலுத்துமாறு தெரிவித்தார். இதுகுறித்து வி.ப.ஜெயபிரதீப் கவனத்துக்கு சென்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அந்த போலி முகநூல்கணக்கை முடக்க முயற்சி மேற்கொண்டார். அதன்படி உடனடியாக அந்த போலி முகநூல் கணக்கு முடக்கப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே பல போலீஸ் அதிகாரிகள் பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி இதேபோன்று பணம் பறிக்க முயன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதன் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மகன் பெயரிலும் போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

----

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com