

திருச்சி,
த.மா.கா. மாநில செயற்குழு
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் ஜி.கே. வாசன் கூட்டத்துக்கு தலைமை தாங்கி கட்சியின் புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அந்த கொடியில் காமராஜர், ஜி.கே. மூப்பனார் உருவ படங்கள் இடம் பெற்று இருந்தன. கூட்டத்தை தொடங்கி வைத்து ஜி.கே. வாசன் பேசியதாவது:-
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி திருச்சியில் கடந்த 28-11-2014 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. நமது கட்சி தொடங்கப்பட்டு 2 வருடங்கள், 2 மாதங்கள், 26 நாட்கள் தான் ஆகிறது. 2 வருடங்கள், 2 மாதங்கள், 26 நாட்கள் என்பது மிகவும் குறுகிய காலமாகும். காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் எந்த வருடம் தோன்றின, எப்போது ஆட்சியை பிடித்தன என்பதற்கெல்லாம் பெரிய வரலாறு உள்ளது. தமிழ் மாநில காங்கிரசை பொறுத்தவரை நாம் ஆண்ட கட்சியும் அல்ல, ஆளுகிற கட்சியும் அல்ல. ஆனால் தமிழகத்தை நாளை ஆளப்போகும் கட்சியாகும். சோதனைகள், சவால்களை எதிர்கொண்டு ஆளுங்கட்சியாக வரும்.
கை விட்டனர்
த.மா.கா. நாணயமான தலைவர்கள், நம்பிக்கையான தொண்டர்களை கொண்ட இயக்கமாகும். மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதோடு மாற்று கட்சியினரை மதிக்க கூடியதாகவும் நமது இயக்கம் உள்ளது. இந்த 2 வருட காலத்தில் நாம் எதிர்கொண்ட சவால்கள், சோதனைகள் ஏராளம். சிலர் நமக்கு நம்பிக்கை கொடுத்த கடைசி நேரத்தில் கைவிட்டார்கள். இத்தனை பிரச்சினைகளையும், சோதனைகளையும் தாங்கி கொண்டு தொண்டர்கள் மன உறுதியோடு இருக்கிறார்கள். தொண்டர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு தான் ஆணிவேர் ஆகும். இயக்கத்தின் வளர்ச்சிக்கு அது உரமாக உள்ளது. மக்கள் நமது இயக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். எனவே மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஒன்று பட்டு செயலாற்றி வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தீர்மானங்கள்
செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
வறட்சியால் வாடும் விவசாய பெருங்குடி மக்களின் கவலையை போக்க விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். மீனவர்கள், விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் உடனடியாக கிடைப்பதற்கு மத்திய நிதி மந்திரியுடன் பேசி தமிழக அரசு உரிய ஏற்பாடு செய்யவேண்டும். மத்திய அரசின் கல்வி கடன் பெற்று மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் படித்த மாணவர்களின் கடன்கள் மற்றும் வட்டியை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்ற மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நதி நீர் பிரச்சினை
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டுவதற்கும், பாலாறு மற்றும் சிறுவானி ஆறுகளின் குறுக்கே ஆந்திரா, கேரள மாநில அரசுகள் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும் மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நதி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்காற்று குழுவையும் அமைக்க வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழகத்தின் நிலையை தெளிவு படுத்த தமிழக அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் தமிழக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டு குழு பிரதமரையும், ஜனாதிபதியையும் நேரில் சந்தித்து பேச தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில நிர்வாகிகள் ஞானதேசிகன், கோவை தங்கம், சக்தி வடிவேல், வெங்கடேஷ், விடியல் சேகர், இன்டர்நெட் ரவி, ஆனந்தராஜா, மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல் (திருச்சி மாநகர்), குணா (தெற்கு), ரவீந்திரன் (வடக்கு) மற்றும் கே.டி. தனபால், மதிவாணன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.