

ஊட்டி,
கோவையில் இருந்து நீலகிரிக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.
40 ஆக்சிஜன் செறிவூட்டிகள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஊட்டி, குன்னூர், கூடலூர் ஆகிய 3 அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் என 12 இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பு குறைந்த உடன், ஆக்சிஜன் உதவி இல்லாமல் சிகிச்சை பெறும் நிலையில் உள்ளவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.
இதற்காக ஊட்டியில் இளைஞர் விடுதி, குன்னூரில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மருத்துவமனை, கண்டோன்மெண்ட் வாரிய மருத்துவமனை, கூடலூரில் ஜி.டி.எம்.ஓ. பள்ளி ஆகிய 4 மையங்கள் உள்ளன.
அங்கு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டாலும், குறைந்த அளவில் பயன்படுத்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 5 முதல் 10 லிட்டர் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 40 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயாராக இருக்கிறது.
கூடுதலாக 100 சிலிண்டர்கள்
மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து உள்ளது. இதனால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கூடலூர் அரசு கலைக்கல்லூரி 200 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது.
ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக ஆக்சிஜன் சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட கலெக்டரிடம் பேசி ஊட்டிக்கு கூடுதலாக 100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
ஆக்சிஜன் சிலிண்டர்கள் காலியான பின்னர் நிரப்பும் வகையில் கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நீலகிரிக்கு என முன்னுரிமை வழங்கப்பட்டு உள்ளது.
சிகிச்சை பெறுபவர்கள் அதிகரிப்பு
நீலகிரியில் ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 1,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்கில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து லாரியில் கொண்டு வந்த திரவ ஆக்சிஜன் போலீஸ் பாதுகாப்புடன் நிரப்பப்பட்டது.
ஊட்டியில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ளது. இதன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்கள் அதிகரித்து வருவதால் கூடுதலாக சிலிண்டர்கள் வரவழைக்கப்பட்டு இருக்கிறது என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.