உங்கள் வீட்டு பிள்ளைக்கு ஆதரவு தாருங்கள்; அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்

மதுரை மேற்கு சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார்.
உங்கள் வீட்டு பிள்ளைக்கு ஆதரவு தாருங்கள்; அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம்
Published on

கடந்த 2 சட்டசபை தொகுதிகளில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமைச்சர், 3வது முறையாக மேற்கு தொகுதியில் களம் காண்கிறார். அவரை பல்வேறு அமைப்பினர் தினமும் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் செல்லூர் ராஜூ ஒவ்வொரு பகுதியாக சென்று தினமும் வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று அவர் மதுரை ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. திருமண்டல பேராயர் ஜோசப்பை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பேராயர் செல்லூர் ராஜூ, மீண்டும் மேற்கு தொகுதியில் வெற்றி அமைச்சராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்தி பிரார்த்தனை செய்தார். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் பழங்காநத்தம் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:

நான் இந்த தொகுதிக்கு புதியவன் அல்ல. உங்களில் ஒருவன். மக்களான நீங்கள் தான் எனது எஜமானர்கள். கடந்த 2 முறை உங்களது ஆதரவால் இந்த தொகுதியில் வெற்றி பெற்று 3வது முறையாக இங்கு களம் காண்கிறேன். எனவே எப்போதும் போல் உங்கள் வீட்டு பிள்ளைக்கு நீங்கள் முழு ஆதரவு தந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

முதன்மை தொகுதி

மதுரையில் 10 சட்டசபை தொகுதி இருந்தாலும், மதுரை மேற்கு தொகுதி எப்போதும் முதன்மையான தொகுதியாக இருக்கிறது. உங்களது ஆதரவினால் இந்த தொகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மக்களின் அத்தியாவசிய பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு நான் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். அதே போல் இந்த முறையும் மக்களுக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். அடிப்படை வசதிகள், சுகாதார பணிகள், வளர்ச்சி திட்டங்கள் என அனைத்திலும் மதுரை மேற்கு தொகுதி முதன்மையாக இருக்க பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com