நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்... மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவன், போலீசில் சரண் அடைந்தார்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்... மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரில் வசித்து வருபவர் ஆறுமுகம் (வயது 60). இவருடைய மனைவி கஸ்தூரி (50). அதே பகுதியில் கூழ் வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக ஆறுமுகம், தனது மனைவி கஸ்தூரி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவருடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை இது தொடர்பாக மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையால் கஸ்தூரியின் தலை மற்றும் வயிற்றில் சரமாரியாக தாக்கினார். மேலும் ஆத்திரம் அடங்காமல், சமையல் அறையில் இருந்த கத்தியால் கஸ்தூரியை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கஸ்தூரி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஆறுமுகம், கண்ணகி நகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த விவரங்களை கூறி சரண் அடைந்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கஸ்தூரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்திடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com