

தூத்துக்குடி:
கிறிஸ்துமஸ் விழாவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
கிறிஸ்துமஸ் விழா
கிறிஸ்துமஸ் விழா நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் தமிழ் கலாசாரங்களை முன்னிறுத்தி கும்மிப்பாட்டு, களியல் ஆட்டம், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்டவைகளுடன் வித்தியாசமான முறையில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
தூத்துக்குடி தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி, டி.சவேரியார்புரம், தருவைகுளம், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த விழாவை கொண்டாடினர். நவதானியங்களை கொண்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரியை பெண்கள் எடுத்து கொண்டு வீதிகள் வழியாக சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். பெண்கள் மற்றும் சிறுமிகள் முளைப்பாரியை தூக்கிச் சென்றபோது மேள தாளம் முழங்க ஊர்வலத்தின் முன்பு இளைஞர்கள் களியல் ஆட்டம், சிலம்பாட்டம் ஆடியபடி சென்றனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட ஊர்வலம் கடற்கரை திடல் சென்றதும் அங்கு கும்மிபாடல்களை பாடி பெண்கள் முளைப்பாரியை கடலில் கரைத்தனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி பல ஆண்டுகளாக முளைப்பாரி ஊர்வலத்தை நடத்தி வருவதாக அந்தப் பகுதி மக்கள் கூறினர்.
ஆறுமுகநேரி
ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலயத்தில் ஆறுமுகநேரி பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளார் தலைமையில் கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து புனித சேவியர் கெரால் சர்வீசிஸ் இளைஞர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து திருப்பலிக்கு வருகை தந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதேபோல் ராஜமன்யபுரம் மேல மாகாணம் ஆகிய ஊர்களில் உள்ள அந்தோணியார் ஆலயங்களில் தூத்துக்குடி மறைமாவட்ட பங்குத்தந்தை எஸ்.எம்.சகாயம் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார்.
சோனகன்விளை அந்தோணியார் கோவில் அலாய்சியஸ் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். இதேபோல் காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை பிரதீஸ் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். சிங்கித்துறை செல்வ மாதா ஆலயத்தில் பங்குத்தந்தை சில்வஸ்டர் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். மேலும் புன்னக்காயல் புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியினை பங்கு தந்தை பிராங்கிளின் அடிகளார் மற்றும் துணை பங்குத்தந்தை சுதர்சன் அடிகளார் நிறைவேற்றினார்கள்.
பழையகாயல்
பழையகாயல் பரிபூரண மாதா ஆலயத்தில் பங்குதந்தை அமலன் தமியான் அடிகளார் புத்தாண்டு திருப்பலி நிறைவேற்றினார். மேலும் ஆறுமுகநேரி பூவரசு பரி திருத்துவ ஆலயத்தில் சேக குருவானவர் சுதாகர் ம், மடத்துவிலை தூய யோவான் ஆலயத்தில் குருவானவர் சிமியோன் பிரபு டேனீயல் சிறப்பு ஜெபம் நிறைவேற்றினார்கள். தொடர்ந்து ஆத்தூர் கிறிஸ்து ஆலயத்திலும் காயல்பட்டினம் அருணாசலபுரம் மிகாவேல் ஆலயத்திலும் காயல்பட்டினம் சேகர குருவானவர் எட்வின் ஞானசேகர் சிறப்பு ஜெபம் நடத்தினார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு திருப்பலிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் கிறிஸ்து பிறப்பை எடுத்துரைக்கும் விதத்தில் திருப்பலி நடைபெற்றது. பாளையங்கோட்டை சவேரியார் ஆசிரியர் பள்ளி முதல்வர் அருள் தந்தை அலெக்ஸ், திருச்சி புனித ஜோசப் கல்லூரி துணை முதல்வர் அருள்தாஸ், கருமாத்தூர் கல்லூரி பேராசிரியர் பாக்கியராஜ் மற்றும் கோவில்பட்டி சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை அலாய்சியஸ் துரைராஜ், உதவிப் பங்குத்தந்தை செல்வின், அருட்சகோதரர் ஜான் சேவியர் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றினார்கள்.
இதேபோல கூசாலிபட்டி, லிங்கம்பட்டி, பூசாரிபட்டி, அப்பநேரி, கசவன்குன்று, வீரவாஞ்ஜி நகர் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கோவில்பட்டி பரிபவுலின் ஆலயத்தில் நேற்று அதிகாலை 4 மணி முதல் கிறிஸ்துமஸ் விழா தொடங்கி காலை 11 மணி வரை சிறப்பு ஆராதனைகளுடன் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை, பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் தலைமையில் தொடங்கியது. பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரி பேராசிரியர் ராய்ஸ் திருப்பலியை நடத்தினார். நிகழ்ச்சியில் ஜாமியா நாட்டின் மாணவர் பெஞ்சமின், குருவானவர் சந்தியாகு ஆகியோர் ஆராதனை நடத்தினார்கள்.
உடன்குடி
உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயத்தின் 114-வது பிரதிஷ்டை பண்டிகை மற்றும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஆலயத்தின் அனைத்து அலங்காரப் பொருட்களும் பனையோலைப் பொருட்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
உடன்குடி பகுதி கிறிஸ்தவ ஆலயங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.