தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதில் எந்தவித தவறும் நடக்கவில்லை நெல்லையில், வைகோ பேட்டி

தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதில் எந்தவித தவறும் நடக்கவில்லை என்று நெல்லையில் வைகோ கூறினார்.
தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதில் எந்தவித தவறும் நடக்கவில்லை நெல்லையில், வைகோ பேட்டி
Published on

நெல்லை,

தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதில் எந்தவித தவறும் நடக்கவில்லை என்று நெல்லையில் வைகோ கூறினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டசபையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிசாமியை கவர்னர் ஆட்சி அமைக்க அழைத்தார். அப்போது அவரிடம் மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் கெடுவும் விதித்தார். அந்த நேரத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் வழங்கி இருப்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என்று கூறினார். பின்னர் 2 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி சட்டசபையை கூட்டிய போது, ஸ்டாலின் இன்னும் கால அவகாசத்தை கொடுக்க வேண்டும் என்றார். அவர் இதுபோன்று முன்னுக்கு பின் முரணாக பலமுறை பேசி உள்ளார்.

இதற்கான காரணம், பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ள, எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்களை வெளியே கொண்டு வரலாம் என்ற காரணத்தாலும், அது முடியாமல் போனதால் சட்டசபையில் வேண்டும் என்றே கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர செய்த திட்டம் தான் அது. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கை நியாயமற்றது.

ஸ்டாலின் தன்னை சட்டசபையில் தாக்கி சட்டையை கிழித்ததாக கூறினார். அதே நேரம் சபாநாயகர் தனபாலின் கையை பிடித்து இழுத்து சட்டை கிழிக்கப்படுவதை டி.வி.யில் பார்த்தோம். ஆனால் தனது சட்டையை கிழித்து விட்டார்கள் என்று சபாநாயகர் நீலிக்கண்ணீர் வடிப்பதாக தி.மு.க.வினர் கூறினர். இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக சபாநாயகர் தனபால் கூறினார்.

தமிழக சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டதில் எந்தவித தவறும் நடக்கவில்லை. 122 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், 11 எம்.எல்.ஏ.க்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். தி.மு.க. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஒன்று சேர்ந்து ஓட்டு போட்டாலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று விடுவார்.

எப்படியாவது தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமைத்து விடலாம் என்ற எண்ணத்தில் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மக்கள் இதற்கு இடம் கொடுக்க மாட்டார்கள். தி.மு.க. எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

சட்டசபையில் யார் கலவரத்தை ஏற்படுத்தினார்கள்? என்பது அனைவருக்கும் தெரியும். சமூக வலைத்தளங்களில் வேண்டுமென்றே பணம் செலவழித்து அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள், தேர்தலில் மக்கள் தங்கள் எண்ணப்படி வாக்களிப்பார்கள்.

மேலும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுவதற்கு அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் நிஜாம், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஊடக தொடர்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com