சிறப்பு தேர்வு மூலம் உதவியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை டாஸ்மாக் நிர்வாகம் தேர்வு நடத்த பணியாளர்கள் எதிர்ப்பு

டாஸ்மாக் நிர்வாகம் சிறப்பு தேர்வு மூலம் 500 இளநிலை உதவியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிறப்பு தேர்வு மூலம் உதவியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை டாஸ்மாக் நிர்வாகம் தேர்வு நடத்த பணியாளர்கள் எதிர்ப்பு
Published on

சென்னை,

டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இளநிலை உதவியாளர்கள்

டாஸ்மாக்கில் தொகுப்பூதிய முறையில் பணிபுரியும் சில்லரை விற்பனை கடை பணியாளர்களில் 500 பேரை சிறப்பு எழுத்து தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக பணி நியமனம் செய்ய விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. மாவட்ட மேலாளர்கள் தங்களது மாவட்டங்களில் டாஸ்மாக் கடை பணியாளர்களின் கூட்டம் நடத்தி விண்ணப்பத்துடன் அறிவிக்கப்பட்ட வழிமுறைகள், அறிவுரைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவத்தை டாஸ்மாக் இணையதளத்தில் ( www.tasm-ac.co.in ) இருந்து பதிவிறக்கம் செய்யவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு

இளநிலை உதவியாளர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-8-2018 அன்று 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வி தகுதியாக பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இணையதளம் (ஆன்லைன்) மூலமாக அனுப்புவதற்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் திருச்சியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

எதிர்ப்பு

டாஸ்மாக் நிர்வாகம் தேர்வு நடத்துவதற்கு பணியாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யூ.சி.) மாநில தலைவர் நா.பெரியசாமி கூறும்போது, இளநிலை உதவியாளர்கள் பணியிடத்துக்கான தேர்வினை நீதிமன்ற மேற்பார்வையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டும் என்றார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com