சுவையான சுவாரசியங்கள் : திரைகடல் ஓடியும் மணமகள் தேடு

சீனாவில் மணப்பெண்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால், ரஷிய பெண்கள் சீனாவின் மருமகள்களாக மாறி வருகிறார்கள்.
சுவையான சுவாரசியங்கள் : திரைகடல் ஓடியும் மணமகள் தேடு
Published on

ரஷியாவைச் சேர்ந்த மார்கரிடா என்பவருக்கு, 12 வயதில் குறைபாடுடைய மகன் இருக்கிறான். மார்கரிடாவுக்கும், அவரது கணவர் சர்கேவுக்கும் நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்தது. அதனால் பிரிந்துவிட நினைத்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினர். கணவரின் வீட்டில் மார்கரிடாவிற்கு பங்கு உண்டு. இருவரும் சரி பாதியாகப் பிரித்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்கி வழக்கை சுமுகமாக முடித்து வைத்தது.

அன்று இரவு மார்கரிடா நிம்மதியாக மாடி அறையில் மகனுடன் தூங்கினார். காலையில் அறையை விட்டு வெளியே வந்தவர் அதிர்ந்து போனார். ஏனெனில் மாடிப்படி ஆரம்பிக்கும் இடத்தில், மிகப் பெரிய சுவர் கட்டப்பட்டிருந்தது. அதாவது மாடியில் இருந்து வரும் வழி, சுவர் மூலம் அடைக்கப்பட்டிருந்தது. சுவரின் மறுபக்கம் சர்கேவின் குரல் கேட்கவே, என்ன விவகாரம் என மார்கரிடா கேட்டிருக்கிறார்.

நீதிபதியின் கருத்துப்படி வீட்டை சரிபாதியாக பிரித்துவிட்டேன். நீ உன் இடத்தில் புதிதாக மாடிப்படி கட்டிக் கொள் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்.

பாவம் மார்கரிடா! காவல் துறையினரை பஞ்சாயத்திற்கு அழைத்து சுவரை இடித்திருக் கிறார். மீண்டும் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறியிருக்கிறது, இந்த விவகாரமான ஜோடி.

விலை உயர்ந்த சிப்ஸ்

உலகின் மிக விலை மதிப்புமிக்க உருளைக்கிழங்கு சிப்ஸை தயாரித்திருக்கிறது, ஸ்வீடனின் முன்னணி மதுபான நிறுவனங்களில் ஒன்றான செயிண்ட் எரிக்ஸ்.

விலை உயர்ந்த மதுபானங்களை மட்டுமே நாங்கள் விற்பனை செய்து வருகிறோம். எங்கள் மதுவுக்கு இணையான நொறுக்குத்தீனி இருக்க வேண்டும் என்பதற்காகவே, உலகின் விலையுயர்ந்த உருளைக்கிழங்கு சிப்ஸை தயாரித்து இருக்கிறோம். அழகான பெட்டியில் 5 உருளைக்கிழங்கு சிப்ஸ் மட்டுமே வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு துண்டின் விலை 736 ரூபாய். 5 துண்டுகள் அடங்கிய ஒரு பெட்டியின் விலை 3,746 ரூபாய். சிப்ஸில் சேர்க்கப்படும் 5 பொருட்களை, 5 நாடுகளில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம். பாதாம் உருளை என்ற அரிய வகை உருளைக்கிழங்கைப் பயன்படுத்துகிறோம். உலகின் முன்னணி சமையல் கலைஞர், தன் கரங்களால் இந்த சிப்ஸை உருவாக்கி இருக்கிறார். அதனால் தான் இவ்வளவு விலை வைக்க வேண்டியதாகிவிட்டது. விலை அதிகமாக இருப்பதால் மக்கள் விரும்புவார்களா? என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் உயர்தரமான மதுவை அருந்துபவர்கள், உயர்தரமான நொறுக்குத்தீனியையும் ஆதரிக்கிறார்கள். தொடர்ந்து உருளைக்கிழங்கு சிப்ஸை உருவாக்க முடிவு செய்திருக் கிறோம் என்கிறார் மேனேஜர் மார்கஸ் ப்ரையாரி.

# ஆடம்பர சரக்கே கொஞ்சம் அதிகம் தான். அதில் ஆடம்பர நொறுக்குத்தீனி வேறயா..?

பூனைக்கு சிலை வைத்த ரசிகர்கள்

உலக விலங்குகள் தினமான அக்டோபர் 4 அன்று, இஸ்தான்புல் பகுதியில் டாம்பிலி என்ற பூனைக்கு சிலை வைக்கப்பட்டிருக்கிறது. நடைபாதையை ஒட்டியுள்ள படியில், டாம்பிலி உட்கார்ந்திருப்பது போல, இந்தச் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.

டாம்பிலி மிகவும் அழகான பூனை. தன்னுடைய குறும்புகளால் ஏராளமானவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கிறது. டாம்பிலியின் விதவிதமான செய்கைகளைப் படங்கள் எடுத்து, இணையத்தில் பலரும் வெளியிட்டனர். இதனால் உலகம் முழுவதும் டாம்பிலியின் புகழ் பரவியது.

படுசுட்டியாக சுற்றி வந்த டாம்பிலி, கடந்த வருடம் நோய்வாய்பட்டு இறந்துவிட, அதன் ரசிகர்கள் மலர் கொத்துகளாலும், மெழுகுவர்த்திகளாலும் பாச மழையை பொழிந்திருக் கிறார்கள். அதுமட்டுமா? டாம்பிலி என்றும் நம் நினைவை விட்டு அகலக்கூடாது என்று முடிவு செய்த 17 ஆயிரம் ரசிகர்கள், அதற்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இஸ்தான்புல் நகர நிர்வாகமும் அந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டது. மனிதர்களைப் போல கையை ஊன்றியபடி உட்கார்ந் திருக்கும் புகழ்பெற்ற டாம்பிலியின் படத்தைச் சிலையாக வடித்து, டாம்பிலி வசித்த தெருவில் வைத்துவிட்டனர்.

எங்கள் நாட்டில் டாம்பிலிக்கு இருந்த ஆதரவில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் தனக்கு ரசிகர் கூட்டத்தைச் சேர்த்திருப்பதில்தான் டாம்பிலி தனித்துவம் பெறுகிறாள் என்கிறார் பூனையின் உரிமையாளர் ஜுலேலா சரிகா.

காவல் காளைகள்

ஸ்பெயினைச் சேர்ந்த எமிலியோ சர்வெரோ, பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலை நடத்தி வருகிறார். பெரிய பரப்பளவில் அமைந்திருக்கும் இதற்கான சேமிப்புக் கிடங்கைப் பாதுகாப்பது, அவருக்கு மிகவும் சவாலான விஷயமாக இருந்து வந்தது.

கம்பி வேலிகள் போட்டால், அதை அப்புறப் படுத்திவிட்டு திருடர்கள் உள்ளே நுழைந்து உதிரிபாகங்களைத் திருடிச் சென்று விடுகின்றனர். உயரமான சுற்றுச்சுவர் கட்டினால், சுவரில் ஓட்டைப் போட்டு உள்ளே புகுந்துவிடுகின்றனர். இதனால் காவலர்களை நியமித்தார்; அதுவும் தோல்வியில்தான் முடிந்தது. சுவரில் அலாரம் வைத்தார்; அதுவும் கைகொடுக்கவில்லை. மோப்ப நாய்களைக் காவலுக்கு வைத்தார்; நாய்களாலும் திருடர்களை விரட்ட முடியவில்லை.

ஒரே ஆண்டில் 7 தடவை திருட்டுச் சம்பவங்கள் நடந்துவிட்டதால், மிகவும் சோர்ந்து போய்விட்டேன். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று யோசித்தபோது, சண்டைக் காளைகள் நினைவுக்கு வந்தன. நாய்களுக்குப் பதிலாகக் காளைகளை இறக்கினேன். என்ன ஆச்சரியம்! காளைகள் மிகப் பிரமாதமாக காவல் காக்கின்றன. காளைகளின் உறுமலைக் கண்டு, திருடர்கள் உள்ளே நுழைய பயப்படுகிறார்கள். காளைகளை கொண்டுவந்த பிறகு, எந்தத் திருட்டுச் சம்பவமும் நடைபெறவில்லை. நிம்மதியாக இருக்கிறேன் என்கிறார் எமிலியோ சர்வெரோ.

பாட்டிகளால் புகழ் பெற்ற உணவகம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் இனோடெகா மரியா என்ற உணவகம் உள்ளது. இங்கு முழுக்க முழுக்க பாட்டிகள்தான் உணவுகளைத் தயாரிக்கிறார்கள். தொழில்முறை சமையல் கலைஞர்களைப் பயன் படுத்துவதில்லை. பாட்டிகள் சமைப்பதாலும், அற்புதமான சுவைகளில் உணவுகள் கிடைப்பதாலும் இந்த உணவகம் பிரபலமாகிவிட்டது.

இத்தாலியில் இல்லத்தரசிகளை வைத்து ஒருவர் உணவகம் நடத்தும் செய்தியைப் படித்தபோது, பாட்டிகளை வைத்து உணவகம் நடத்தும் யோசனை உதித்தது. உடனே செயலில் இறங்கிவிட்டேன். ஆர்வமுள்ள பாட்டிகளை வேலையில் சேர்த்தேன். பாலஸ்தீனம், செக்குடியரசு, அர்ஜென்டினா, நைஜீரியா, அல்ஜீரியா என்று உலகம் முழுவதிலுமுள்ள 30 பாட்டிகள், எங்கள் உணவகத்தில் வேலை செய்கிறார்கள். அதனால் எந்த வகை உணவுகளைக் கேட்டாலும், எங்களால் செய்து கொடுக்க முடிகிறது. இன்றைய உணவு முதல் நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த உணவுகள் வரை இங்கே செய்து தருகிறோம். பாட்டிகளுக்குள் போட்டி இருக்கும். தினமும் யார் பிரமாதமாகச் சமைக்கிறாரோ, அவருக்கு மரியாதை செய்வோம். தங்களால் இந்த வயதிலும் அற்புதமாகச் சமைக்க முடிகிறது என்பதும், சம்பாதிக்க முடிகிறது என்பதும் பாட்டிகளை உற்சாகப்படுத்துகிறது என்கிறார் உணவகத்தின் உரிமையாளர் ஸ்காரவெல்லா.

மெமரி போலீஸ்

பிரிட்டனில் வசிக்கும் ஆன்டி போப், காவல்துறையில் பணிபுரிகிறார். இவரை எல்லோரும் மெமரி போலீஸ் என்று அழைக்கிறார் கள். குற்றவாளிகளின் புகைப்படங் களை ஒருமுறை பார்த்தால், அப்படியே நினைவில் வைத்துக்கொள்கிறார். இப்படி கடந்த 4 ஆண்டுகளில் 850 குற்றவாளிகளின் புகைப்படங்களையும், அவர்களது குற்ற நடவடிக்கைகளையும் நினைவில் வைத்து பாதுகாத்து வருகிறார். கம்ப்யூட்டரில் பதிவாகியிருக்கும் குற்றவாளிகளையும், சந்தேகப்படும் நபர்களையும் மனதில் பதிந்து கொண்டு, இவரது எல்லைக்குட்பட்ட பகுதிகளை பத்திரமாக பாதுகாக்கிறார்.

என்னால் எப்படி நினைவில் வைத்துக்கொள்ள முடி கிறது என்பதை விளக்க முடியவில்லை. ஆனால் படமாகவோ, தகவலாகவோ, குற்றமாகவோ எப்படியோ ஒருவிதத்தில் அவர்களைப் பற்றிய விஷயங்கள் எனக்குள் பதிவாகிவிடுகின்றன. சில ஆண்டுகளுக்குப் பிறகு முடி அலங்காரத்தை மாற்றினாலும்கூட, என்னால் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது என்கிறார், ஆன்டி போப்.

இரவிலும் ஒளிரும் சாலை

போலந்து நாட்டின் வட பகுதியில் இருக்கிறது, லிட்ஸ்பார்க் வார்மின்ஸ்கி நகரம். இந்த நகரத்தில் சமீபத்தில் புதுமையான சாலை அமைத்து, உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். சைக்கிளில் செல்பவர்களுக்கான சிறப்புப் பாதை அது. இரவு நேரத்திலும் பளபளவென்று இந்த சாலை ஜொலிக்கிறது. சூரிய சக்தி மூலம் ஒளிரக்கூடிய சாலையை போலந்து கட்டிட நிறுவனம் ஒன்று, விஞ்ஞானிகள் உதவியுடன் உருவாக்கியிருக்கிறது. செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சாலை, சூரியனில் இருந்து சக்தியை எடுத்துக்கொள்கிறது. பகல் முழுவதும் சூரிய சக்தியைக் கிரகித்துக் கொள்வதால், 10 மணி நேரம் வரை ஒளிர்கிறது. அதனால் இரவு முழுவதும் சாலை பளபளவென்று காட்சியளிக்கிறது. ஒளிரும் சாலையால் சைக்கிளில் செல்பவர்கள், இருளிலும் எளிதாகச் செல்ல முடிகிறது; ரசனையோடு பயணிக்க முடிகிறது.

இந்தியாவின் சுவாரசியம்

X

Daily Thanthi
www.dailythanthi.com