தென்திருப்பேரை அருகே இரவில் பயங்கரம்: பெண் சரமாரி வெட்டிக்கொலை கள்ளக்காதலன் வெறிச்செயல்

தென்திருப்பேரை அருகே நேற்று இரவு பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்திருப்பேரை அருகே இரவில் பயங்கரம்: பெண் சரமாரி வெட்டிக்கொலை கள்ளக்காதலன் வெறிச்செயல்
Published on

தென்திருப்பேரை,

தென்திருப்பேரை அருகே நேற்று இரவு பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

மீன் கம்பெனி ஊழியர்

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள முதலாம்மொழி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மனைவி மல்கியா (வயது 35). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு முத்துசாமி கொலை செய்யப்பட்டார். மல்கியாவும், அதே ஊரை சேர்ந்த அவருடைய கள்ளக்காதலனான டிரைவர் மாணிக்கராஜ் (40) ஆகியோர் சேர்ந்து முத்துசாமியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மல்கியா பழையகாயலில் உள்ள மீன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதே நேரத்தில் மல்கியாவும், மாணிக்கராஜூம் தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

வெட்டிக்கொலை

இந்த நிலையில் மாணிக்கராஜூக்கும், மல்கியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதாவது மல்கியாவுக்கும் வேறு நபர்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனை மாணிக்கராஜ் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் மல்கியா, மாணிக்கராஜை எதிர்த்து செயல்பட்டு உள்ளார். இது மாணிக்கராஜிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று இரவு மல்கியா மீன் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மாணிக்கராஜ் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கி இருந்தார். திடீரென்று அவர் அரிவாளுடன் மல்கியா அருகில் வந்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்தும் குத்தினார். இதில் மல்கியா சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணிக்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மல்கியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாணிக்கராஜை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com