குடும்ப தகராறில் பயங்கரம் இளம்பெண் வெட்டிக்கொலை கணவன் கைது

வாய்மேடு அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற அவரது கணவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
குடும்ப தகராறில் பயங்கரம் இளம்பெண் வெட்டிக்கொலை கணவன் கைது
Published on

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் 2-ம் சேத்தி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் செல்வவிநாயகம் (வயது38). டிரைவர். இவருடைய மனைவி பானு(வயது 25). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. பானுவுக்கும் அவரது கணவர் செல்வவிநாயகத்துக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக பானுவுக்கும் செல்வவிநாயகத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வவிநாயகம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பானுவின் கழுத்தில் வெட்டியதாக தெரிகிறது.

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். பானு வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாய்மேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பானுவின் கணவன் செல்வவிநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பானுவுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குடும்ப தகராறில் பெண் ஒருவரை அவரது கணவர் வெட்டிக்கொன்ற சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com