தானே– குஜராத் ரோட்டில் துயரம் கன்டெய்னர் விழுந்து கார் நொறுங்கியது; ஒருவர் பலி

தானே– குஜராத் ரோட்டில் கார் மீது கன்டெய்னர் விழுந்த பயங்கர விபத்தில் ஒருவர் பலியானார்.
தானே– குஜராத் ரோட்டில் துயரம் கன்டெய்னர் விழுந்து கார் நொறுங்கியது; ஒருவர் பலி
Published on

தானே,

தானே குஜராத் ரோட்டில் கார் மீது கன்டெய்னர் விழுந்த பயங்கர விபத்தில் ஒருவர் பலியானார். ஒரு வழிப்பாதையில் கார் சென்றதால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

தானே மிராரோடு பகுதியை சேர்ந்தவர் முகேஷ்(வயது35). கட்டிட ஒப்பந்ததாரர். இவர் சம்பவத்தன்று இரவு தானேயில் இருந்து குஜராத்திற்கு நண்பர் லால்ஜி(43) என்பவருடன் காரில் புறப்பட்டார். கார் இரவு 11.30 மணியளவில் தானே குஜராத் கோட்பந்தர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தபோது, அந்த பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

எனவே முகேஷ் குஜராத்தில் இருந்து தானே நோக்கி வாகனங்கள் வரும் ஒரு வழிப்பாதையில் காரை ஓட்டினார்.

இதில் காய்முக் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி, கார் மீது மோதியது. மேலும் மழை பெய்து சாலை ஈரமாக இருந்ததால் கன்டெய்னர் லாரி சிறிது தூரம் சறுக்கி சென்றது. துரதிருஷ்டவசமாக லாரியின் பின்னால் இருந்த கன்டெய்னர் கார் மீது விழுந்தது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. மேலும் காரில் சிக்கிய முகேஷ் உடல்சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். லால்ஜி படுகாயம் அடைந்தார். அவர் உதவிகேட்டு அலறினார்.

தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் காரில் சிக்கி இருந்த லால்ஜியை மீட்டனர். அவர் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

முகேஷ் விதிமுறை மீறி ஒருவழிப்பாதையில் சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த விபத்து குறித்து காசர்வடவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com