மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.50 ஆயிரம் எடுத்த பெண் கைது

குரும்பூர் அருகே மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.50 ஆயிரத்தை எடுத்த பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அவர் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது.
மூதாட்டியின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.50 ஆயிரம் எடுத்த பெண் கைது
Published on

தென்திருப்பேரை,

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள தெற்கு நல்லூரைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மனைவி தாயம்மாள் (வயது 75). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் குரும்பூரில் உள்ள வங்கியில் பணம் எடுக்க சென்றபோது, அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

தாயம்மாளுக்கு தெரியாமல் அவரது ஏ.டி.எம். கார்டு மூலம் வெவ்வேறு நாட்களில் திருச்செந்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து மொத்தம் ரூ.50 ஆயிரத்தை மர்மநபர் எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தாயம்மாள் தனது ஏ.டி.எம். கார்டுடன் ரகசிய குறியீட்டு எண்ணை ஒரு பேப்பரில் எழுதி, அவற்றை துணிப்பையில் வைத்து வீட்டில் உள்ள ஒரு ஆணியில் தொங்கவிட்டு உள்ளார். பெரும்பாலான நேரங்களில் அவரது வீடு திறந்து கிடந்து உள் ளது.

இதை பயன்படுத்தி அவரது வீட்டுக்குள் மர்மநபர் புகுந்து ஏ.டி.எம். கார்டை திருடி பணத்தை எடுத்து விட்டு பின்னர் அதை அந்த இடத்திலேயே வைத்து வந்தது தெரியவந்து உள்ளது. இதனால் தாயம்மாளுக்கு தெரிந்த நபரே கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்தனர்.

பக்கத்து வீட்டு பெண் கைது

இந்த நிலையில், நேற்று மாலை நல்லூர் பஸ் நிறுத்தம் அருகே குரும்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற இளம்பெண் ஒருவர், போலீசாரை பார்த்ததும் ஓட்டம் பிடிக்க முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தாயம்மாளின் பக்கத்து வீட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி முத்துசெல்வம் (28) என்பதும், அவரே தாயம்மாளின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததும், அப்போது ஏ.டி.எம். கார்டை திருடி தாயம்மாளின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்ததும் தெரியவந்தது.

ஆடம்பர வாழ்க்கைக்கு...

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முத்துசெல்வம் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு மூதாட்டியிடம் கைவரிசை காட்டியது தெரியவந்து உள்ளது. பாலசுப்பிரமணியன் உடன் பிறந்தவர்கள் அனைவரும் வசதியாக இருக்கின்றனர். பாலசுப்பிரமணியன் மணப்பாடு பகுதியில் மீன்களை படகில் இருந்து கரைக்கு கொண்டு வரும் வேலை செய்து வருகிறார். இதனால் கஷ்டப்பட்டு வந்த முத்துசெல்வம், மற்றவர்களை போல் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு தாயம்மாளின் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்தது தெரியவந்து உள்ளது.

போலீசார் தன்னை தேடுவது குறித்து அறிந்ததும் முத்துசெல்வம் உடன்குடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக நல்லூர் பஸ்நிறுத்தம் வந்து உள்ளார். அப்போது அவர் போலீசாரின் பிடியில் சிக்கியது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து போலீசார் முத்துசெல்வம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தாயம்மாளின் வங்கி கணக்கில் இருந்து எடுத்த பணத்தில், ரூ.10 ஆயிரம் செலவு செய்தது போக மீதி பணத்தை முத்துசெல்வம் தனது வீட்டில் பதுக்கி வைத்து இருந்தார். அந்த ரூ.40 ஆயிரத்தையும் போலீசார் மீட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com