

திருச்சி,
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி திருச்சியில் காளையுடன் வந்து கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊர்வலம்-மறியல்
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நடைபயணம் மற்றும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க இருப்பதாக முகநூல், டிவிட்டர் பக்கங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை 10.30 மணி அளவில் திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டனர்.
அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டபடியே சென்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே வந்ததும் அலங்கரிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை ஒன்றை மாணவர்கள் இழுத்து வந்தனர். இதனைக் கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் காளையை அங்கிருந்து அப்புறப்படுத்த கூறினர்.
இதனால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் கலெக்டர் அலுவலக சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதனால் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே ஒருசில மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று கோரிக்கை மனுவை அளித்தனர். தொடர்ந்து வெளியே வந்த அவர்கள் மற்ற மாணவர்களுடன் இணைந்து மறியலில் ஈடுபட்டனர். கலெக்டர் வந்து 2 நிமிடம் மாணவர்கள் முன்பு பேச வேண்டும் என்றும், அதுவரை கலைந்து செல்ல மாட்டோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். தொடர்ந்து மாணவர்கள் கூச்சலிட்டதால் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அபிராமி அங்கு சென்று மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனாலும் மாணவர்கள் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என உறுதி அளிக்க வேண்டும். இதற்காக மக்கள் பிரதிநிதியாக யாராவது ஒருவர் இங்கே வர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லாமல் போனது.
போக்குவரத்து முடங்கியது
மாணவர்களின் போராட்டம் பகல் 1.30 மணி வரை நீடித்தது. இந்த போராட்டத்துக்கு மாணவிகளும் ஆதரவளித்து கலந்து கொண்டனர். இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் மீண்டும் மாணவர்களிடம் பேசினார். இதில் சமாதானம் அடைந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து முடங்கியது.
இது குறித்து தேசிய மாணவர் பாதுகாப்பு குழுவை சேர்ந்த சக்திபிரசாத் கூறுகையில், தமிழகத்தில் 2 ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த மக்கள் தயாராகி விட்டனர். தற்போது மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட தொடங்கி உள்ளனர். இந்த போராட்டத்துக்காக முகநூல், வாட்ஸ்அப், டிவிட்டர் ஆகியவை மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்தோம். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.