மாதவரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மாதவரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்த போது டிரைவர் மற்றும் பயணிகள் உடனடியாக கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மாதவரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
Published on

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கார் ஒன்று நேற்று 4 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் தடா நோக்கி சென்றது. காரை டிரைவர் மெய்ஞானம் என்பவர் ஓட்டினார்.

மாதவரம் மேம்பாலம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் மெய்ஞானம், காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். காரில் இருந்த 4 பணிகளும் உடனடியாக கீழே இறங்கிவிட்டனர்.

அதற்குள் கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

டிரைவர் மற்றும் பயணிகள் உடனடியாக கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com