கிளையூரில் இன்று நடக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் வாபஸ்

கிளையூரில் இன்று நடக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக வாபஸ் பெறப்பட்டது.
கிளையூரில் இன்று நடக்க இருந்த டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம் வாபஸ்
Published on

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ளது கிளையூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து மேல்சித்தாமூருக்கு செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடைக்கு வரும் குடிபிரியர்கள் மதுகுடித்துவிட்டு அந்தபகுதியில் வீண் தகராறில் ஈடுபட்டு, அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி செய்து வந்ததாக தெரிகிறது.

அதோடு இந்த டாஸ்மாக் கடை அமைந்து இருக்கும் சாலையின் வழியாக தான் கிளையூர் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மேல்சித்தாமூரில் உள்ள அரசு பள்ளிக்கு சைக்கிளிலும், நடந்தும் சென்று வருகிறார்கள். இவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலைக்கு சென்று விட்டதாகவும், எனவே பிரச்சினைக்குரிய இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று கிளையூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இல்லையெனில் 19ந்தேதி(அதாவது இன்று) தங்களது கிராமத்தில் இருந்து மாணவர்களை மேல்சித்தாமூர் பள்ளிக்கு அனுப்பாமல் பேராட்டத்தில் ஈடுபட அந்த கிராம மக்கள் அறிவித்தனர்.

இதை தொடர்ந்து, செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் கிளையூர் கிராம மக்களுடன் சமாதான கூட்டம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் கலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும், இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து, தாசில்தார் கலா பேசுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரையில் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் எனவே கிராம மக்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையேற்ற கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் இன்று நடக்க இருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தஙகமணி, துணை தாசில்தார் மெகருன்னிசா, வருவாய் ஆய்வாளர் வரலட்சுமி, சப்இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தனிப்புரிவு போலீஸ் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com