

150-க்கும் மேற்பட்ட...
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குமாரவலசு ஊராட்சிக்கு உட்பட்டது லட்சுமிபுரம். இந்த பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் செல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளது. மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை.
இதன்காரணமாக இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி இந்த பகுதியை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சாலை மறியல்
இந்த நிலையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு ஈரோடு-வெள்ளோடு ரோட்டுக்கு நேற்று காலை 7.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அங்குள்ள வெள்ளோடு சரணாலயம் பிரிவு ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் ஈரோட்டில் இருந்து சென்னிமலை, அனுமன்பள்ளி, அறச்சலூர் போன்ற பகுதிகளுக்கும், அதேபோல் ஈரோடு நோக்கி செல்லும் பஸ், லாரி போன்ற வாகனங்களும் வரிசையாக அணிவகுத்து நின்றன. அதுமட்டுமின்றி பள்ளி, கல்லூரி வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலம் (சென்னிமலை), சிவக்குமார் (பெருந்துறை) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் வாகனங்களை மாற்றுப்பாதையில் போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வடிகால் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும், என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியலை கைவிட்டு 9.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
வெள்ளோடு அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.