காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி காலாவதியான குளிர்பானங்களை கைப்பற்றி அழித்தனர்.
காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
Published on

நாகர்கோவில்,

திடீர் சோதனை


குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி கருணாகரன் தலைமையில், நாகர்கோவில் நகர உணவு பாதுகாப்பு அதிகாரி சங்கரநாராயணன், அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி பிரவீன் ரகு, திருவட்டார் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி சிதம்பரம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று திடீரென நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

மொத்தம் 20 கடைகள் சோதனை செய்யப்பட்டன. இதில் சில கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட 30க்கும் மேற்பட்ட குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை தரையில் கொட்டி அழிக்கப்பட்டன.

அழிப்பு


மேலும் சில கடைகளில் பெரிய, பெரிய பாக்கெட்டுகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த மிக்சர், காரச்சேவு, சிப்ஸ் வகைகளை சோதனை செய்தனர். அவற்றில் தயாரித்த தேதி, பயன்படுத்தும் தேதி, உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனத்தின் பெயர் போன்ற விவரங்கள் அடங்கிய விவரச்சீட்டுகள் எதுவும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு விவரச்சீட்டு இல்லாமல் இருந்த மிக்சர், காரச்சேவு, சிப்ஸ் போன்ற காரவகைகள் சுமார் 400 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை அதிகாரிகள் நகராட்சி குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டியில் கொட்டி அழித்தனர்.

மேலும் ஈ மொய்க்கும் வகையில் திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட வடை, பஜ்ஜி போன்றவும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து அதிகாரிகள் எழுதியும் வாங்கினர். இதனால் நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com