பாரதி நகரில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் குழாய் அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாலையீடு பகுதியில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் குழாயை நகராட்சி அலுவலர்கள் அகற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாரதி நகரில் பயன்பாட்டில் இருந்த குடிநீர் குழாய் அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு
Published on

புதுக்கோட்டை,

குடிநீர் குழாய்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சராசரியாக பெய்யக் கூடிய மழையைவிட இந்த ஆண்டு மிகவும் குறைவாக மழை பெய்து உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல் உள்ளிட்ட பயிர்கள் கடும் வறட்சி காரணமாக கருகியது. இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட மாலையீடு பாரதி நகர் பகுதியில் புதுக்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு இருந்தது.

எதிர்ப்பு

இந்த குடிநீர் குழாயில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், கடை வைத்திருப்பவர்கள் மற்றும் சாலையில் லாரி உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களும் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாரதிநகர் பகுதிக்கு வந்த நகராட்சி அலுவலர்கள் இந்த குடிநீர் குழாயில் இருந்து அதிக அளவில் குடிநீர் வீணாகிறது எனக்கூறி குடிநீர் குழாயை அகற்றி விட்டும், அங்கிருந்த பள்ளத்தை மண்ணை போட்டு நிரப்பிவிட்டும் சென்றனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள சிலர் நகராட்சி அலுவலர்களிடம் எதிர்ப்பு தெரிவித்து, குடிநீர் குழாயை அகற்ற வேண்டாம் என கூறினர்.

குடிநீர் குழாயை காணவில்லை

இந்த நிலையில் நேற்று பாரதிநகரை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் குழாயை காணவில்லை. எடுத்தவர்கள் கொடுக்கவும் என ஒரு அட்டையில் எழுதி அந்த இடத்தில் வைத்து உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் இந்த குடிநீர் குழாயில் தான் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகிறோம். இதைப்போல கார், லாரி உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களும், இந்த குழாயில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். மேலும் இந்த குழாய் பிளாஸ்டிக்கால் ஆனதாக இருப்பதால் அடிக்கடி அது உடைந்து குடிநீர் வீணாகிறது. எனவே நகராட்சி சார்பில் இரும்பில் குடிநீர் குழாய் உடனடியாக அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நகராட்சியை வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com