கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இ–சேவை மையம் திறக்கப்படாததால் கிராம மக்கள் அவதி

பரமக்குடி அருகே கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இ–சேவை மையம் திறக்கப்படாததால் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இ–சேவை மையம் திறக்கப்படாததால் கிராம மக்கள் அவதி
Published on

பரமக்குடி,

பரமக்குடி யூனியனுக்கு உட்பட்டது வேந்தோணி கிராமம். இங்கு ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து பல மாதங்களாகியும் கிராம சேவை மையம் இன்னும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் கிராம ஒழிப்பு சங்க கூட்டங்கள் ஏதாவது ஒரு மரத்தடி நிழலில் நடத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் கட்டிடமும் தூசி படிந்து போய் குப்பைகளாக கிடக்கிறது.

கட்டிடத்தில் அடிக்கப்பட்ட பெயிண்ட் சுண்ணாம்புகளும் ஆங்காங்கே உதிர்ந்து போய் பார்ப்பதற்கு பழைய கட்டிடம் போல காட்சி அளிக்கிறது. இதனால் வேந்தோணி கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்ட இசேவை மையம் தொடங்கப்படாமல் இருப்பதால் கிராம மக்கள் சான்றிதழ்கள் பெற அவதியடைந்து வருகின்றனர்.

எனவே கிராம மக்களின் நலன் கருதி திறக்கப்படாமல் கிடக்கும் கிராம சேவை மையத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரமோகனிடம் கேட்டபோது, கிராம சேவை கட்டுமான பணிகள் முடிவடைந்து விட்டது.

மின் இணைப்பு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக அந்த சேவை மையம் திறக்கப்படாமல் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. நாங்களும் பலமுறை மின்வாரிய அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறோம். விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com