விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் கோர்ட்டில் சரண்

விக்கிரவாண்டி அருகே விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் வானூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
விவசாயி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 3 பேர் கோர்ட்டில் சரண்
Published on

விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே ராதாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஒளிவண்ணன் (வயது 62), விவசாயி. இவர் கடந்த 6ந் தேதி மதியம் சர்க்கரை நோய்க்காக மாத்திரை வாங்க தனது மோட்டார் சைக்கிளில் முண்டியம்பாக்கம் கடைவீதிக்கு புறப்பட்டார். முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு செல்லும் சுரங்கப்பாதை வழியாக சென்றபோது ஒரு கும்பல் ஒளிவண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நிலப்பிரச்சினை தொடர்பான முன்விரோதம் காரணமாக கடந்த 2013ம் ஆண்டு ஒளிவண்ணனின் அண்ணன் ஆசைத்தம்பியை ஒளிவண்ணன் தரப்பினர் வெட்டிக்கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழி தீர்க்கும் வகையில் ஒளிவண்ணனை ஆசைத்தம்பியின் மகன் செம்மல் மற்றும் அவரது தரப்பினர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக செம்மல் (வயது 26), ரகு (20), விஜய் (20) உள்பட 10 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியை சேர்ந்த 4 பேரை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த இந்த கொலை வழக்கில் தொடர்புடைய புதுச்சேரி முதலியார்பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (28), கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ரவிக்குமார் (25), ராஜதுரை என்கிற அய்யனார் (23) ஆகியோர் நேற்று காலை வானூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் அவர்கள் 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்த அந்தோணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com