கருங்கல் அருகே போலீஸ் என கூறி தந்தை-மகன் கடத்தல் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கருங்கல் அருகே போலீஸ் என கூறி தந்தை- மகனை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கருங்கல் அருகே போலீஸ் என கூறி தந்தை-மகன் கடத்தல் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

கருங்கல்,

கருங்கல் அருகே பூக்கடை ராமச்சன்விளை வீடு பகுதியை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 50). இவருடைய மனைவி ராதாபாய்(47). ஜெயகாந்தன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (19) என்ற மகன் உள்ளார். தற்பொது ஜெயகாந்தன் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜெயகாந்தன், முகேஷ் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது சாதாரண உடையில் வந்த 2 நபர்கள் தங்களை சென்னை மதுரவாயல் போலீஸ் என்றும், விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி ஜெயகாந்தன், முகேஷ் ஆகியோரை வீட்டில் இருந்து அழைத்து சென்றனர்.

ஆனால், நீண்டநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த ராதாபாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மதுரவாயல் போலீசை தொடர்பு கொண்டு விசாரித்தார். அப்போது, அவ்வாறு யாரையும் விசாரணைக்கு அழைக்கவில்லை என்று கூறினர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த ராதாபாய் தனது மகன் மற்றும் கணவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்கு பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து தந்தை- மகனை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com