கொள்ளையடிக்க சென்ற வீட்டை தீவைத்து எரித்த கொள்ளையர்கள்

கோவில்பட்டியில், கொள்ளையடிக்க சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாத ஆத்திரத்தில், அந்த வீட்டை தீ வைத்து எரித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொள்ளையடிக்க சென்ற வீட்டை தீவைத்து எரித்த கொள்ளையர்கள்
Published on

கோவில்பட்டி,

ஓய்வுபெற்ற மில் தொழிலாளி

கோவில்பட்டி சீனிவாச நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 60). ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவருடைய மனைவி ஜானகி. கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுப்பையா தன்னுடைய குடும்பத்தினருடன் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் சுப்பையா வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்தனர். அதில் நகை, பணம் எதுவும் இல்லை.

வீட்டுக்கு தீ வைப்பு

இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த துணிகள் மற்றும் நில பத்திரங்களை வெளியே எடுத்து, அவற்றுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றனர். இதனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் அடைந்தன.

அதிகாலையில் சுப்பையாவின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியதையும், வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் அறிந்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கும், மேற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீஸ் வலைவீச்சு

தீயணைப்பு நிலைய அதிகாரி வீரலட்சுமணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அந்த வீட்டில் தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர், சுப்பையாவிடம் போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் தனது வீட்டில் பீரோவில் நில பத்திரங்கள் மட்டுமே இருந்தன. நகை, பணம் எதுவும் வைக்கவில்லை, என்று தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் நகை, பணம் இல்லாத ஆத்திரத்தில், அந்த வீட்டுக்கு கொள்ளையர்கள் தீவைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com