வறட்சி நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

தாராபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வறட்சி நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினார்கள்.
வறட்சி நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
Published on

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் கிரேஸ் பட்சுவா தலைமை தாங்கினார். தாராபுரம் தாசில்தார் கிருஷ்ணவேணி, காங்கேயம் தாசில்தார் வேங்கடலட்சுமி மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும், விவசாயிகள் தரப்பில் காளிமுத்து, ஈஸ்வரமூர்த்தி, பழனிச்சாமி, முருகானந்தம் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:- வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தென்னை மரங்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் காய்ந்துவிடும். வறட்சி நிவாரணத்திற்கான கணக்கெடுப்பில் தென்னை மரங்கள் சேர்க்கப்படவில்லை. எனவே தென்னை மரங்களை ஜூலை மாத இறுதியில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை

உப்பாறு அணைக்கு உட்பட்ட 5 ஊராட்சிகளில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் குடிநீர் ரூ.5-க்கு விலை கொடுத்து வாங்கப்படுகிறது. எனவே குடிநீர் பற்றாக்குறையை போக்க உப்பாறு அணைக்கு பி.ஏ.பி.யிலிருந்து உயிர் தண்ணீர் திறந்துவிட வேண்டும். அலங்கியத்தை அடுத்துள்ள கோட்டந்துரையில் தனியார் கோழி இறைச்சி நிறுவனம் தொடங்க உள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்காக அலங்கியம் அமராவதி வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பகுதியில் கோழி இறைச்சி நிறுவனம் தொடங்கினால், எதிர்காலத்தில் கோழி கழிவுகளும், அதன் கழிவுநீரும் அமராவதி வாய்க்காலில் விடப்படும். அப்போது அமராவதி வாய்க்கால் பாசனத் தண்ணீர் மாசுபடும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எனவே தனியார் கோழி இறைச்சி நிறுவனம் தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது. அனுமதி வழங்கினால் விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும். அலங்கியத்திலிருந்து சிக்கினாபுரம் செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு முகாம்

சுயவிருப்பத்தோடு சீமை கருவேலமரங்களை அகற்ற வருபவர்களிடம், ஊராட்சி நிர்வாகம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வருகிறது. அமராவதி ஆற்றுப்படுகையில் வளர்ந்திருக்கும் சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்கு டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் எடுத்தவர்கள் பெரிய மரங்களை மட்டுமே வேறோடு அகற்றி வருகிறார்கள். சிறிய மரங்களை அகற்றுவதில்லை. எனவே டெண்டர் முறையை பொதுப்பணித்துறையினர் கைவிடவேண்டும்.

குண்டடம் மாட்டுச்சந்தையில் வாரந்தோறும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடத்தவேண்டும். சொட்டுநீர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இந்த திட்டத்தில் 25 சதவீதம் மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. 100 சதவீத மானியம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

விரைவில் தீர்வு

அதன்பிறகு கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகள, விவசாயிகளுக்கு என்னென்ன திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை பற்றி விளக்கிப்பேசினார்கள். முடிவில் சப்-கலெக்டர் கிரேஸ் பட்சுவா பேசும்போது விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் அந்தந்த துறைகள் மூலமாக விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com