தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால் கரூர் பகுதியில் கோரை உற்பத்தி பாதிப்பு

தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால் கரூர் பகுதியில் கோரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீரின்றி வறட்சி நிலவுவதால் கரூர் பகுதியில் கோரை உற்பத்தி பாதிப்பு
Published on

கரூர்,

கோரை சாகுபடி

பருவமழை பொய்த்ததாலும், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும் தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு சென்று உள்ளனர்.

இந்நிலையில் கரூர் மாவட்டம் நெரூர், என்.புதூர், சோமூர், திருமக்கூடலூர், வாங்கல், நெரூர் தென்பாகம், ரெங்கநாதன் பேட்டை ஆகிய பகுதிகளில் காவிரி கரையோரம் கோரை பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் இதை நம்பி பிழைப்பு நடத்துகின்றனர்.

தற்போது பருவமழை பொய்த்து காவிரி ஆறு வறண்டு கிடப்பதால் கோரை பயிர் கொஞ்சம், கொஞ்சமாக காய்ந்து வருகிறது. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நேரங்களில் 1000 முதல் 1200 கட்டுகள் வரை அறுவடை செய்யப்படும். ஆனால் தற்போது 400 கட்டு கோரை மட்டுமே அறுவடை செய்யப்படுகிறது. இதனால் இதில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

உதவ அரசு முன்வருமா?

கோரை விவசாயத்தில் ஈடுபட்ட பல விவசாயிகள் இன்று கட்டிட வேலை மற்றும் இதர கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் தினந்தோறும் கஷ்டத்துடனேயே தங்களது வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். பள்ளி செல்லும் அவர்களது குழந்தைகளும் தாய்-தந்தை படும் வேதனையை நினைத்து கலங்கி வருகிறார்கள்.

இதுகுறித்து கோரை சாகுபடியில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் கூறுகையில், காவிரி ஆற்றில் சுமார் 15 அடி முதல் 20 அடிவரை மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் சுமார் 80 அடிக்கு கீழே சென்று விட்டது. தற்போது உள்ள நிலையில் காவிரி ஆற்றில் மணல் எடுப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல், வாழை விவசாயிகளுக்கு வழங்க இருப்பது போல எங்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com