இரும்பு தகடுகள் கழன்று கிடந்த சம்பவம்: மலை ரெயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு

குன்னூர்– ஊட்டி இடையே தண்டவாளத்தில் இரும்பு தகடுகள் கழன்று கிடந்த சம்பவம் தொடர்பாக மலை ரெயில் பாதையில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரும்பு தகடுகள் கழன்று கிடந்த சம்பவம்: மலை ரெயில் பாதையில் அதிகாரிகள் ஆய்வு
Published on

குன்னூர்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காகவும், உள்ளூர் மக்களுக்காகவும் குன்னூர்ஊட்டி இடையே தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு காலை 7.45 மணி, 10.30 மணி, 12.30 மணி, 4.30 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படுகின்றன. அதே போல் ஊட்டியில் இருந்து குன்னூருக்கு காலை 9 மணி, மதியம் 12 மணி, 2 மணி, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஊட்டியில் இருந்து குன்னூருக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது. 5 பெட்டிகளில் சுமார் 50 பேர் பயணம் செய்தனர். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி குன்னூரில் இருந்து ஊட்டிக்கு சென்று பணிபுரியும் அரசு, தனியார் நிறுவன ஊழியர்களும் ரெயிலில் இருந்தனர்.

இதனிடையே நேற்று முன்தினம் மாலை குன்னூர்ஊட்டி ரெயில் பாதையில் அருவங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் கிலோ மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தை இணைக்கும் இணைப்பு இரும்பு தகடுகள் 4 இடங்களில் அகற்றப்பட்டு கழன்று கிடப்பதை ரோந்து சென்ற ஊழியர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அருவங்காடு ரெயில் நிலையம் மற்றும் கேத்தி ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் ரெயில் கேத்தி ரெயில் நிலையத்தை தாண்டி வந்துக் கொண்டிருந்தது. உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் கொடுக்கப்பட்டு ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அருவங்காடு மற்றும் குன்னூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்ற ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைத்தனர். இதனால் 45 நிமிடம் தாமதமாக ரெயில் குன்னுரை 7.45 மணிக்கு அடைந்தது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நேற்று நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் இணைப்பு தகடுகளை தண்டவாளத்துடன் பொருத்த பயன்படும் நெட்டுகள் அங்கு கிடந்தன. பழைய இரும்பு வியாபாரிகளும் ரெயில்வே பொருட்களை எடுக்க மாட்டார்கள். எனவே எதற்காக தண்டவாள இணைப்பு இரும்பு தகடுகளை கழற்றினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தண்டவாளத்தில் இரும்பு தகடுகள் கழன்று கிடந்தது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் தற்காலிகமாக தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரெயில் இயக்கப்பட்டது. நேற்று முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டு, சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இரும்பு தகடுகள் கழன்று கிடந்த சம்பவம் தொடர்பாக முழுவிசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரெயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா? என்று கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com