

ஊட்டி
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை யொட்டி நீலகிரியில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சாம்பல் புதன்
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதை நினைவு கூறும் பொருட்டு கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.
அதன்படி இந்த ஆண்டில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. ஊட்டி சேரிங்கிராசில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் காலை 7 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு ஆராதனை நடந்தது.
சிறப்பு பிரார்த்தனை
நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கி தவக்கால திருப்பலியை நிறைவேற்றினார். தொடர்ந்து கடந்த ஆண்டு காய்ந்த குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி, அதனை மந்திரித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டு பூசப்பட்டது.
இதில் பங்கு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மற்றும் பங்கு மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு தினமும் சிலுவை பாதை தியானித்தல், திருத்தல பயணங்கள் சென்று வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
சிலுவை பாதை தியானம்
ஊட்டி சி.எஸ்.ஐ. தூய திரித்துவ ஆலயத்தில் காலை 8 மணிக்கு பங்கு தந்தை இம்மானுவேல் வேழவேந்தன் தலைமையிலும், புனித தாமஸ் ஆலயத்தில் பங்கு தந்தை ஜெரேமியா ஆல்பிரட் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முடிவில் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது.
அதேபோல் புனித ஸ்டீபன் ஆலயம், புனித வெஸ்லி ஆலயம், காந்தல் குருசடி ஆலயம், பிங்கர்போஸ்ட் புனித திரேசன்னை ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தவக்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிலுவை பாதை தியானம் நடக்க இருக்கிறது.