அ.தி.மு.க.வில் புதிய அதிகார மையம் உருவாகிறது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

அ.தி.மு.க.வில் புதிய அதிகார மையம் உருவாகிறது முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

காவேரிப்பட்டணம், அ.தி.மு.க.வில் புதிய அதிகார மையம் உருவாகி கொண்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
Published on

பேட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடராசன் தஞ்சையில் செய்தியாளர்கள் சந்திப்பில் என்னை பற்றி சொல்லியிருக்கும் கருத்துக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
இவர் எனக்கு பதவி கொடுத்ததாக சொல்கிறார். நான் எப்போதுமே என்னுடைய உழைப்பை நம்புபவன். தலைமையை நம்புபவன். இரண்டாம் கட்ட தலைவனிடத்தில் சென்றோ அல்லது பின்புற கதவு வழியாக சென்றோ பதவி பெற்றவன் அல்ல. முதலில் 1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். காலத்தில் இந்த நகர செயலாளராக தேர்தலில் நின்று வெற்றி பெற்றவன். அதனை தொடர்ந்து ஜெயலலிதா என்னை அழைத்து இளைஞரணி மாவட்ட செயலாளராக அறிவித்தார். அடுத்ததாக ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பை கொடுத்தார்.

துணை சபாநாயகர்

தற்போது நாடாளுமன்ற துணைத்தலைவராக உள்ள தம்பித்துரை, இந்த இயக்கத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
புதுடெல்லியில் முதல்-அமைச்சர், ஜல்லிக்கட்டுக்காக பிரதமரை சந்தித்த சூழலில் தம்பித்துரை, பொதுச்செயலாளரிடத்தில் ஒரு தவறான தகவலை கொடுத்து, அவரிடம் இருந்து ஒரு கடிதத்தை பெற்று, இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து கொண்டு பிரதமரை சந்திக்க சென்றார். ஆனால் பிரதமர் ஏற்கனவே கொடுத்த அப்பாயிண்ட்மெண்ட்படி தான் சந்திக்க முடியும் என கூறி மறுத்துள்ளார்.

தம்பித்துரை ஏன் மனுவை எடுத்து செல்ல வேண்டும். ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்து, புதுடெல்லிக்கு சென்றிருந்தால் தம்பித்துரை இப்படி செய்திருப்பாரா? ஏன் முதல்-அமைச்சர் மீது அவ்வளவு பெரிய காழ்ப்புணர்ச்சி. அதோடு மட்டுமில்லாமல் இவர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று நினைத்தோ, அல்லது வேறு யாரையாவது முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று நினைத்தோ இவ்வாறு பேசுகிறார்.

தம்பித்துரை புது டெல்லியில் விமர்சிக்கிறார். தஞ்சையில் நடராசன் பிரதமரை விமர்சிக்கிறார். ஆக இவர்கள் இருவரும் சேர்ந்து ஏதோ ஒரு குழப்பத்தை கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. ஆட்சியில் இருக்கின்ற முதல்-அமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளரும் இவர்கள் இருவரையும் கண்காணிக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அமைச்சர்களுக்கு பதில்

திவாகரன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து நான் சொன்ன கருத்திற்கு பல அமைச்சர்கள் உடனடியாக விமர்சனங்களையும், கண்டனங்களையும் தெரிவித்துள்ளனர்.

நான் ஆட்சியை பற்றி விமர்சனம் செய்யவில்லை. ஆட்சியை பற்றி விமர்சனம் செய்திருந்தால் அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்வது நியாயம். நான் கட்சியின் நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளரிடம் தான் வேண்டுகோள் வைத்தேன். அதற்கு பொதுச்செயலாளர் பதில் சொல்லியிருக்க வேண்டும். அல்லது கட்சி நிர்வாகிகள், அமைப்பு செயலாளரோ, தலைமை நிலைய செயலாளரோ யாராவது ஒருவர் பதில் அளித்திருக்க வேண்டும்.

ஏன் இவர்கள் இவ்வளவு வேகமாக பதில் சொல்கிறார்கள். இவர்கள் இன்னொரு அதிகார மையத்தில் போய் அடைக்கலம் அடைந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் திவாகரன் இடத்திலே அடைக்கலம் ஆகிவிட்டார்கள். அங்கே ஒரு புதிய அதிகார மையம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின்பு, ஜெயலலிதாவை தொண்டர்கள் அழைத்து, இந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறி பொதுச்செயலாளர் பதவி கொடுத்து ஜெயலலிதாவின் பின்னால் அனைவரும் நின்றார்கள். அவர் முதலமைச்சரானார். இறுதி வரை மக்களுக்காக சேவை செய்தார்.

இன்றைக்கு 2,500 நிர்வாகிகள் ஒன்று கூடி, பரிந்துரை செய்து, தங்களை(சசிகலா) பொதுச்செயலாளராக நியமித்திருக்கிறார்கள். 2,500 பேர் போக மீதி ஒரு கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 500 தொண்டர்கள் அமைதியாக பார்த்து கொண்டிருக் கிறார்கள். அவர்களுடைய அன்பை நீங்கள் பெற வேண்டும் என்று சொன்னால் இந்த உறவுகளை நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com