கல்லூரி மாணவர்கள் ஒரே இடத்தில் போராட போவதாக தகவல் பரவியதால் பரபரப்பு

பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி மாணவர்கள் ஒரே இடத்தில் போராட போவதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நெல்லை வ.உ.சி. மைதானத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.
கல்லூரி மாணவர்கள் ஒரே இடத்தில் போராட போவதாக தகவல் பரவியதால் பரபரப்பு
Published on

நெல்லை,

தமிழக அரசு சமீபத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தியது. இதை கண்டித்தும், இந்த பஸ் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றும் பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினரும், கல்லூரி மாணவர்களும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நெல்லையில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்த சில அமைப்பினர் முடிவு செய்து முகநூல், வாட்ஸ்-அப் மூலம் தகவல்களை பரப்பி வருகின்றனர். நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரிகளுக்கும், ஆலங்குளம், சுரண்டை, செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளிடையே இந்த தகவல் அதிக அளவில் பரவியது.

மேலும் அந்த தகவலில், பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைவரும் நேற்று (திங்கட்கிழமை) காலையில் கல்லூரி வருகின்ற மாணவ-மாணவிகள் கருப்பு உடை அணிந்து வரவேண்டும். யாரும் கல்லூரிக்கு செல்லக்கூடாது. கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந் தது. மேலும் அனைவருக்கும் ஒரு தகவல் வரும், அப்போது அந்த குறிப்பிட இடத்தில் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவலை அறிந்த போலீசார் மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து கல்லூரிக்கு வருகிறார்களா? என்றும், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனரா? என்றும் கண்காணிக்க ஆரம்பித்தனர். மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்ற தகவலையடுத்து நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள முக்கிய கல்லூரிகளின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆனால், மாணவர்கள் யாரும் கருப்பு சட்டை அணிந்து வரவில்லை.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஒன்று கூடி ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது போல் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் போராட்டத்தில் ஈடு படப்போவதாக கிடைத்த தகவலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால் மாணவ-மாணவிகள் யாரும் வ.உ.சி. மைதானத்திற்கு வரவில்லை.

இந்தநிலையில் பஸ்கட்டண உயர்வை கண்டித்து நேற்று நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் காலையில் வகுப்பை புறக் கணித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியேறி பாளையங்கோட்டை- திருச்செந்தூர் ரோட்டில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாணவ -மாணவிகள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர். பின்னர் அவர்கள் கல்லூரிக்கு செல்லாமல் கலைந்து சென்றனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com