ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை 3–வது நாளாக கடையடைப்பு போராட்டம்

ஈரோட்டில் 3–வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடந்தது. அடுத்த கட்ட நடவடிக்கை ஆலோசனை கூட்டத்துக்கு பின் எடுக்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை 3–வது நாளாக கடையடைப்பு போராட்டம்
Published on

ஈரோடு,

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நாளை (சனிக்கிழமை) முதல் அமலாகிறது. இந்தநிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு வியாபாரிகள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சரக்கு மற்றும் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஈரோட்டில் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், ஜவுளி தொழில் சார்ந்த 22 சங்கங்கள் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தின. கடந்த 27ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 3வது நாளாகவும் நடந்தது. ஜவுளி சார்ந்த வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கவில்லை. நிறுவனங்கள் அனைத்துக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தன. ஈரோடு, வீரப்பன்சத்திரம், லக்காபுரம், சித்தோடு பகுதிகளில் விசைத்தறிகள் ஓடவில்லை. ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகள், பட்டறைகள் மூடப்பட்டு இருந்தன.

வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நேற்று ஈஸ்வரன் கோவில் வீதியில் கூடினார்கள். அங்கிருந்து வணிகவரித்துறை அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட், காமராஜ் வீதி வழியாக இந்த ஊர்வலம் சென்றது.

ரூ.90 கோடி பாதிப்பு


வணிகவரித்துறை அலுவலகத்தில் மனு கொடுத்த பின் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சங்க தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது:

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டால் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு வரும் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த சட்டத்துக்கான நடைமுறைகள் முழுமையாக கணினி மூலமாகவே இருக்கும் என்பதால், இனிமேல் தொழில் செய்ய வேண்டும் என்றால் கணினி கட்டாயம் என்கிற நிலை ஏற்படுகிறது. இதற்காக தனியாக செலவு செய்யும்போது வருவாய் இழப்பு ஏற்படும். எனவே பலரும் தொழிலை விட்டு வெளியேறும் அவலம் ஏற்படும். இந்த நிலை வராமல் இருக்க, சிறு, குறு, நடுத்தர ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டத்தை அறிவித்தோம். கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. 700 பட்டறைகள் இயங்கவில்லை. 30 ஆயிரம் தறிகள் ஓடவில்லை. ஒரு நாளுக்கு தலா ரூ.30 கோடி வீதம் 3 நாட்களும் ரூ.90 கோடி வர்த்தகம் மற்றும் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை


எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கருப்பு கொடிகள் ஏற்றி இந்த போராட்டத்தை நடத்தினோம். கலெக்டர், சுங்க வரித்துறை அதிகாரி, வணிகவரித்துறை அதிகாரிகளிடமும் எங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து இருக்கிறோம்.

அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அனைத்து சங்க ஆலோசனை கூட்டம் வருகிற 1ந் தேதி (நாளை) நடத்தி முடிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com