

மதுரை,மே.
மதுரையில் நேற்று புதிதாக 1,011 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 15 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
உயிரிழப்புகள் அதிகம்
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை மிகக் கடுமையாக உள்ளதால் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்கின்றன. மதுரையிலும் தினமும் 15-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். அந்த வகையில் நேற்றும் 15 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 27 வயது வாலிபரும் அடங்குவார். 52, 45, 57 வயது ஆண்கள், 62, 62, 64, 68, 78, 85, 86, 92 வயது முதியவர்கள், 52, 54, 58 வயது பெண்கள் என 15 பேர் அடுத்தடுத்து உயரிழந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மதுரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.
1011 பேர் பாதிப்பு
மேலும் நேற்று புதிதாக 1011 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 755 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை 49 ஆயிரத்து 452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுபோல், நேற்று 712 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களைச் சேர்த்து இதுவரை 37 ஆயிரத்து 918 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவை ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சுகாதார துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
.....
30-ல் இருந்து 10 ஆயிரம்
மதுரையில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்தது. அதாவது ஜனவரி 1-ந்தேதி சிகிச்சையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 156 மட்டுமே. பிப்ரவரி 1-ந்தேதி 96 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். மார்ச் 1-ந் தேதி 51 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். அதன் பின்னும் படிப்படியாக பாதிப்பு ஒரு வாரத்தில் குறைந்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக சென்று விட்டது. ஆனால் தற்போது கொரோனாவின் 2-ம் அலை மிக தீவிரமாக இருப்பதால் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து 10 ஆயிரத்தை கடந்துள்ளது.