

பனப்பாக்கம்,
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளி கேசவன் (வயது 56). இவருடைய மனைவி தனலட்சுமி (50). இவர்களுடைய மகள் பாரதி (36) கடந்த 19-ந் தேதி பாரதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பாரதி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். பாரதிக்கு வந்த காய்ச்சல் எந்த வகையான காய்ச்சல் என்று உறுதிபடுத்தப்படவில்லை. மர்மகாய்ச்சல் காரணமாக பாரதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இறந்த பாரதி திருமணமாகாதவர்.
2 பேர் பலி
இதேபோல் பனப்பாக்கத்தை அடுத்த பாணாவரம் அருகே உள்ள மேட்டு குன்னத்தூரில் உள்ள அமராவதிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (26). இவர் காய்ச்சல் காரணமாக கடந்த 14-ந் தேதி சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் சேட்டு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சேட்டும் மர்மகாய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பனப்பாக்கம் அருகே மர்மகாய்ச்சலால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பனப்பாக்கம் அருகே சுகாதார சீர்கேடுகள் அதிகமாக உள்ளது. அதனால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் உருவாகி, பரவ வாய்ப்புள்ளது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விரைவாக சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.