

திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் பிரசித்தி பெற்ற பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பூண்டி மாதா பேராலய முகப்பில் இருந்து பூண்டி அன்னையின் சிறு சொரூபம் வைக்கப்ட்ட சப்பரத்தை பக்தர்கள் சுமந்து வந்தனர். தொடர்ந்து அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை பக்தர்கள் பிடித்து முன் செல்ல ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் பேராலயத்தை அடைந்தது. கொடிமரத்தின் அருகில் கொடியை சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அடிகளார் புனிதம் செய்தார். பின்னர் கொடியேற்றப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் மரியே வாழ்க என கூறி ஜெபம் செய்தனர். தொடர்ந்து மரியா நம்பிக்கை மிகுந்தவர் என்ற பொருளில் சிறப்பு திருப்பலியை சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ்அந்தோணிசாமி நிறைவேற்றினார். திருப்பலியில் பூண்டிமாதாபேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், மற்றும் சுற்று வட்டார பங்குத்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
தேர்பவனி
விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனி நடைபெறும். பல்வேறு அருட்தந்தையர்கள் பல்வேறு தலைப்புகளில் திருப்பலிநிறைவேற்றுகிறார்கள். 14ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மரியாநம்பியோருக்கு அடைக்கலம் என்ற தலைப்பில் குடந்தை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி சிறப்பு திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு வண்ண விளக்குகள் மற்றும் மல்லிகை மலர் அலங்காரத்தில் வாணவேடிக்கை முழங்க அலங்கார தேர்பவனி நடக்கிறது. தேர்பவனியை குடந்தை பிஷப் தொடங்கி வைக்கிறார். 15ந் தேதி(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி மரியாபுதுமையின் அன்னை என்ற தலைப்பில் நிறைவேற்றப்படுகிறது. கொடியேற்றத்தையொட்டி நேற்று பூண்டி மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கொடியேற்று விழாவில் திரளானோர் கலந்து கொண்டனர்.