சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை

சின்னமனூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை விதித்து தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 3 வாலிபர்களுக்கு தூக்கு தண்டனை
Published on

தேனி,

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தாள். ஒரு பள்ளியில் அவர் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி பள்ளிக்கு சென்று விட்டு சிறுமி வீட்டுக்கு வந்தாள். பின்னர் புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு பெரியம்மா வீட்டுக்கு செல்வதாக கூறிச்சென்றாள். அந்த சிறுமி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தாள்.

பெரியம்மா வீட்டுக்கு சென்றவள் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் சிறுமியை காணவில்லை. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் செய்தார். அதன்பேரில் சிறுமியை காணவில்லை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து அவளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், அதே ஊரில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் சிறுமி பிணமாக கிடந்தாள். பொதுமக்களும், போலீசாரும் பிணத்தை மீட்டனர். இதையடுத்து சிறுமி கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்கு மாற்றப்பட்டது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில் சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்கு (பிரிவு 302) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை பிடிக்க அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையில், காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த பச்சையப்பன் மகன் சுந்தர்ராஜ் (வயது 29), ஏசுதாஸ் மகன் ரோபின் என்ற ரவி (27), பழனிசாமி மகன் குமரேசன் (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் சேர்ந்து அதே ஊரில் உள்ள ஒரு சோளக்காட்டுக்குள் சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நடந்ததை வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவளின் கழுத்தை நெரித்து கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசிச்சென்றதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து சுந்தர்ராஜ், ரோபின் என்ற ரவி, குமரேசன் ஆகிய 3 பேரையும் மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். கொடூர செயலில் ஈடுபட்ட 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு சிறை காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக கொலையாளிகள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். பகல் 1 மணியளவில் நீதிபதி திலகம் முன்னிலையில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். தீர்ப்பு கூறுவதற்கு முன்பாக 3 வாலிபர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், இளம் வயதில், அறியாமல் தவறு செய்து இருக்கின்றனர். அவர்கள் திருந்தி வாழ்வதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து அரசு சிறப்பு வக்கீல் ராஜராஜேஸ்வரி, இந்த வழக்கில் கொலை செய்தவர்களின் வயதை பார்க்காமல், கொலை செய்யப்பட்ட சிறுமியின் வயதை பார்க்க வேண்டும். 10 வயதே ஆன சிறுமி கொடூரமாக கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு உள்ளார். டெல்லியில் இதுபோன்ற கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் வயதை காட்டிலும் இந்த சிறுமியின் வயது குறைவானது. சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இந்த தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அரிதிலும், அரிதான வழக்காக இதை எடுத்துக் கொண்டு கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து தீர்ப்பை அரை மணி நேரம் கழித்து கூறுவதாக தெரிவித்துவிட்டு நீதிபதி தனது அறைக்கு சென்றார். தொடர்ந்து பிற்பகல் 2.10 மணியளவில் நீதிமன்றம் கூடியது. கொலையாளிகள் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிபதி திலகம் தீர்ப்பு கூறினார். மேலும், அவர் கூறுகையில், சிறுமியை 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். கொலை செய்த குற்றத்துக்கு 3 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் பலாத்காரம் செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சிறுமியின் பெற்றோருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார். பின்னர், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com