

நாமக்கல்,
நாமக்கல் பிடில் முத்துதெருவை சேர்ந்தவர் பாஷா. இவரது மனைவி மெகருன் நிஷா. இவர்களின் மகள் ஹசின் (வயது 42). இவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு பரமத்தியை சேர்ந்த பெண் ஒருவர் அழைத்து சென்றார். இந்த நிலையில் ஹசினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் ஹசினின் பெற்றோர் கூறியிருப்பதாவது:
குடும்ப சூழ்நிலை காரணமாக சவுதி அரேபியாவில் உள்ள தமாம் என்ற இடத்தில் வீட்டு வேலைக்கு எனது மகளை பரமத்தியை சேர்ந்த பெண் ஒருவர் அழைத்து சென்றார். அவர் சென்று 8 மாதங்கள் ஆகியும், இதுவரை அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. ஹசின் பற்றி அவளை அழைத்து சென்ற பெண்ணிடம் விசாரித்தபோது எனக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்.
மற்றவர்களிடம் கேட்டால் அந்த பெண், ஹசினை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்து விட்டதாக கூறுகின்றனர். எங்களது மகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, என்னை மிகவும் கொடுமைபடுத்துகின்றனர். என்னால் அடி தாங்க முடியவில்லை. என்னை காப்பாற்றுங்கள், இல்லையெனில் என் உயிரை மாய்த்து கொள்வேன் என்று கூறுகிறாள். எனவே எங்களது மகளை மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.