

நம்பியூர்,
நம்பியூர் அருகே உள்ள மொட்டணம் ஏகாளிமேடு பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி. விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மகள் தீபா (வயது 15). இவர் நம்பியூர் அருகே சாவக்கட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கூடத்துக்கு அரசு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு தீபா சென்றார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் வீடு வந்து சேராததால் தீபாவின் பெற்றோர் பதறிப்போயினர். இதைத்தொடர்ந்து அவர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களிலும் தீபாவை தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரோட்டோர பள்ளத்தில்...
இந்த நிலையில் மொட்டணத்தில் இருந்து ஏகாளிமேட்டுக்கு செல்லும் வழியில் ரோட்டோர பள்ளத்தில் படுகாயங்களுடன் தீபா பிணமாக கிடந்ததை நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து உள்ளனர். உடனே அவர்கள் இதுபற்றி தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் அவருடைய பெற்றோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீபாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதுபற்றி அறிந்ததும் வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வாகனம் மோதி சாவு
விசாரணையில், நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் மொட்டணத்துக்கு பஸ்சில் தீபா வந்து உள்ளார். பின்னர் மொட்டணம் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஏகாளிமேட்டில் உள்ள அவருடைய வீட்டுக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி உள்ளது. இந்த விபத்தில் ரோட்டோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட தீபா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தது, தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தீபாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.