குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்

குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் குறைவாகவே விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்துச் சென்றனர்.
குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்
Published on

தென்காசி,

குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் குறைவாகவே விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்துச் சென்றனர்.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் சீசன் நன்றாக இருந்தது. அதன் பின்னர் சீசன் சுமாராகவே இருந்து வருகிறது. பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளில் போதுமான அளவு தண்ணீர் விழவில்லை. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைவாகவே உள்ளது. விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. குற்றாலத்தில் நேற்று சாரல் எதுவும் இல்லை. காலை முதலே நன்கு வெயில் அடித்தது. பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் குறைவான அளவே விழுந்தது. நேற்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவிக் கரைகளில் குவிந்தனர்.

ஆனால் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குளித்துச் செல்ல போலீசார் அனுமதித்தனர்.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்தால் மட்டுமே குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்தை எதிர்பார்க்க முடியும். சீசனும் நன்றாக இருக்கும். ஆனால் அங்கு இன்னும் தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால் குற்றாலம் அருவிகளில் தற்போது சீசனும் சுமாராகவே உள்ளது.

இதனால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரமும் மந்தமாகவே உள்ளது. எனவே அருவிகளில் எப்போது தண்ணீர் நன்றாக விழும் என சுற்றுலா பயணிகளும், கடை வியாபாரிகளும் எதிர்பார்த்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com