

திருப்பனந்தாள்,
பள்ளிவாசலில் திருட்டு
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் கீழபள்ளிவாசல் அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பள்ளிவாசலில் பிலால் என்பவர் காவலாளியாக உள்ளார். இவர் பள்ளிவாசலில் உள்ள ஒரு அறையில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொழுகை முடிந்தவுடன் காவலாளி பிலால் பள்ளிவாசலை பூட்டிவிட்டு தனது அறைக்கு சென்று விட்டார். நள்ளிரவில் திடீரென சத்தம்கேட்டு பிலால் வெளியே வர முயன்றுள்ளார். ஆனால் அவரது அறையின் கதவு வெளிபுறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் வெளியே வரமுடியாததால் பிலால் இதுகுறித்து ஜமாத்தலைவர் சேக் அலாவூதினை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அதன் பேரில் அவர் அங்கு வந்த போது பள்ளிவாசலின் வெளிபுற இரும்புக்கதவுகளின் பூட்டு மற்றும் உள்ளே இருந்த 2 மரக்கதவுகளும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைத்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பள்ளிவாசலில் இருந்த உண்டியல், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒலிபெருக்கிகள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் நள்ளிரவில் பள்ளிவாசலின் வெளிப்புற இரும்பு கதவுகளின் பூட்டை உடைத்து விட்டு, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் காவலாளியை அறையில் பூட்டிவிட்டு, உண்டியல் மற்றும் ஒலிபெருக்கிகளை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக சேக் அலாவூதின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிவாசலில் திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த பள்ளிவாசலில் கடந்த ஆண்டும்திருட்டு சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.