

விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் முனிசெல்வி (வயது 25). மாற்றுத்திறனாளியான இவர் தனது தாயார் சந்தனத்துக்கு சொந்தமான 96 சென்ட் நிலத்தை அதே ஊரைச் சேர்ந்தவர் அபகரித்து கூட்டுறவு நிலவள வங்கியில் அடமானம் வைத்தது தொடர்பாக நடவடிக்கை கோரி சிவகாசி தாசில்தார், ஆர்.டி.ஓ. மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து மனு கொடுத்து வந்துள்ளார். ஆனால் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் முனிசெல்வி தனது தாயார் சந்தனத்துடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார். 3 சக்கர சைக்கிளில் வந்த அவர் நில அபகரிப்பு தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுக்க வந்துள்ளதாக பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் தெரிவித்தார். ஆனால் திடீரென முனிசெல்வி மீது தாயார் சந்தனம் பெட்ரோலை ஊற்றினார். முனிசெல்வி, தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீக்குளிக்கப் போவதாக கூறியபடி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் துரிதமாக செயல்பட்டு முனிசெல்வியின் தீக்குளிப்பை தடுத்தனர். சந்தனம் வைத்திருந்த பெட்ரோல் கேனையும் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து முனிசெல்வி மாவட்ட மறுவாழ்வு அலுவலகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
முனிசெல்வி கொடுத்த நிலஅபகரிப்பு தொடர்பான மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து புகார் கொடுக்க வந்தது தொடர்பாக கலெக்டர் சிவஞானத்திடம் தெரிவிக்கப்பட்டது.
அவர் இது தொடர்பாக சிவகாசி ஆர்.டி.ஓ. இருதரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் முனிசெல்வியை சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர். தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.