

ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் பகுதியில் சிலர் நாட்டுத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்துக்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையொட்டி நாமக்கல் மாவட்ட வனஅலுவலர் டாக்டர் காஞ்சனா உத்தரவின்பேரில், ராசிபுரம் வனச்சரக அலுவலர் தங்கராஜ், வாழப்பாடி வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் மங்களபுரம் பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்
அப்போது பறவைக்காடு என்ற இடத்தில் விவசாயி பூபதி (வயது 55) என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 நாட்டுத்துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவரது வீட்டில் விலங்குகளை வேட்டையாடி கொல்ல பயன்படுத்தப்படும் 23 வெடிபொருட்களும், 2 கத்திகளையும் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த வெடிபொருட்களையும், கத்திகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்த பொருட்களை மங்களபுரம் போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். மங்களபுரம் போலீசார் தலைமறைவான விவசாயி பூபதியை தேடி வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடி விவசாயி வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 நாட்டுத்துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.