திருச்சியில் இருந்து குலசேகரத்திற்கு நூதன முறையில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

திருச்சியில் இருந்து குலசேகரத்திற்கு நூதன முறையில் மணல் கடத்திய 3 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் இருந்து குலசேகரத்திற்கு நூதன முறையில் மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்
Published on

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டத்தில் ஆற்று மணல் தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகள் முடங்கி கிடக்கிறது. ஒரு டாரஸ் லாரி ஆற்று மணல் ரூ.75 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதன்காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் மணல் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதில் சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் மணலை கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து வருகி றது. இதைதடுக்கும் விதமாக மாவட்டத்தின் எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று சப்இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 லாரிகள் அந்த வழியாக வந்தன.

லாரிகளில் சிமெண்ட் மூடைகள் கொண்டு வருவதுபோல் தனியார் சிமெண்டு கம்பெனியின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. லாரியின் மேல்பகுதியில் தார்பாய் போட்டு கயிறால் கட்டப்பட்டு இருந்தது. ஆதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது 3 லாரிகளிலும் ஆற்று மணல் இருந்ததை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இன்றி திருச்சியில் இருந்து குலசேகரத்திற்கு சிமெண்ட் மூடைகள் கொண்டு வருவது போல் நூதனமுறையில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து, அதன் டிரைவர்களான வியன்னூர் கோவிபள்ளி பகுதியை சேர்ந்த செல்வகுமார்(வயது 38), திருவட்டார் ஆற்றூர் அருகே உள்ள ஆக்கவிளையை சேர்ந்த சசிக்குமார்(38), மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(40) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com