விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
விடுமுறை தினத்தையொட்டி மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
Published on

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலை 10 மணி முதல் அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம், கடற்கரை கோவில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம், கூட்டமாக பயணிகள் வருகை தந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பலர் தங்கள் குழந்தைகளுடனும், குடும்பத்தினருடனும் வந்திருந்ததை காண முடிந்தது.

நேற்று காலை முதல் சுற்றுலா வாகனங்கள் திரண்டதாலும், போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால் சாலை ஓரத்திலேயே சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் கடற்கரை சாலை, ஐந்துரதம், கிழக்கு ராஜ வீதி, மேற்குராஜவீதி உள்ளிட்ட சாலையில் ஆங்காங்கே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பாடசாலை தெரு, தென்மாட வீதி, அர்ச்சுனன் தபசு சாலை உள்ளிட்ட இடங்களில் சாலை ஓரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் இந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.

அதேபோல் அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்யாததால் அந்த பகுதிக்கு வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

அதேபோல் அர்ச்சுனன் தபசு பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையையொட்டி அகற்றப்பட்டது. மீண்டும் அந்த பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்படவில்லை. குடிநீர் வசதி இல்லாத நிலையை பயன்படுத்தி இந்த பகுதியில் உள்ள சாலை ஓர வியாபாரிகள் சுற்றுலா பயணிகளிடம் அதிகவிலைக்கு குடிநீர் பாட்டில்களை விற்பதும், சிலர் போலி குடிநீர் பாட்டில்களை விற்றும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றி வருகின்றனர்.

நேற்று சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் புராதன மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com