நெல்லையில் வீட்டில் அடைத்து வைத்து சிறுமி பாலியல் பலாத்காரம் முதியவருக்கு வலைவீச்சு
நெல்லை,
நெல்லையில், வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
14 வயது சிறுமி
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் ரவி(வயது 58). கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி இறந்து விட்டார். ரவிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விதவை பெண் ஒருவர் தேவையான உதவிகளை செய்து வந்தார். அந்த பெண்ணுக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில் அந்த பெண் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதை தொடர்ந்து அந்த 2 பெண் குழந்தைகளையும் ரவி பராமரித்து வந்தார். இதில் மூத்த பெண் திருமணம் ஆகி சென்று விட்டார். 2-வது சிறுமிக்கு தற்போது 14 வயது ஆகிறது. இந்த சிறுமி ரவியின் பராமரிப்பில் இருந்தார். அவருக்கு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து தங்க வைத்திருந்தார். சிறுமி அந்த வீட்டில் தங்கி இருந்து சந்திப்பில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.
பாலியல் பலாத்காரம்
இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு ரவி அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சந்திப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சத்தியவாணி முத்து மற்றும் போலீசார் மீனாட்சிபுரத்துக்கு சென்று சம்பந்தப்பட்ட சிறுமியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ரவி, தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமி தெரிவித்தார்.
இதை அறிந்த ரவி தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக சந்திப்பு அனைத்து மகளிர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான ரவியை தேடி வருகின்றனர்.

