திருவள்ளூர் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 119 பேர் தேர்வு எழுத உள்ளனர்

இன்று தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 48 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர் என்று கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்தள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 119 பேர் தேர்வு எழுத உள்ளனர்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 20-4-2018 வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 24 ஆயிரத்து 249 மாணவர்கள், 23 ஆயிரத்து 870 மாணவிகள் என மொத்தம் 48 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 14 மாணவர்களும், 7 மாணவிகளும், முகப்பேர் நேத்ரோதயா சிறப்பு பள்ளியை சேர்ந்த பார்வையற்ற மாணவர்கள் 5 பேரும் தேர்வு எழுத உள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகளுக்காக 159 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் 18 கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கட்டுக்காப்பு மையத்திற்கும் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரும், மூத்த பட்டதாரி ஆசிரியர் ஒருவரும் நியமனம் செய்து மொத்தம் 36 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

வினாத்தாள்கள் அனைத்தும் அரசு தேர்வுகள் இயக்குனரிடம் இருந்து பெறப்பட்டு அந்தந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டு ஆயுதம் ஏந்திய காவலர் மேற்பார்வையில் பாதுகாப்பாக உள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள்கள் போதுமான அளவு பெறப்பட்டுள்ளது.

தேர்வை நல்லமுறையில் நடத்த கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, கல்வித்துறை அலுவலர்களுடன் தேர்வுக்குழு கூட்டமும் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 159 தேர்வு மையங்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், மூத்த பட்டதாரி ஆசிரியர்களை துறை அலுவலர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக உள்ள மையங்களுக்கு கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களும், கூடுதல் துறை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் 20 தேர்வர்கள் கொண்ட ஒரு அறைக்கு ஓர் அறைகண்காணிப்பாளர் வீதம் 2 ஆயிரத்து 406 அறைகண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வர்கள் ஒழுங்கீன செயலை தடுக்கும் பொருட்டு 50 பறக்கும் படை உறுப்பினர்களும், 310 நிரந்தர படை உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதை தவிர மாவட்ட கலெக்டரால் நியமனம் செய்யப்படும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் தேர்வு மையத்தை திடீரென்று பார்வையிடுவார்கள். வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் இருந்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை கொண்டு செல்ல 31 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு இந்த வழித்தடங்களுக்கு 62 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களுக்கு முதன்மை கல்வி அலுவலரால் நியமனம் செய்யப்பட்டுள்ள முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையங்களுக்கு சென்று தேவையான முன்னேற்பாடுகளை செய்து முடித்துள்ளனர். மேலும் தேர்வு மையங்களுக்கு தேவையான எழுது பொருட்கள் அனைத்தும் போதுமான அளவு ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் பெறப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் நாட்களில் தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரிய உயர்அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சீரான போக்குவரத்து குறித்த நேரத்தில் இயக்குவதற்கு மாநகர மற்றும் மண்டல போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அனைத்திலும் வகுப்பறையில் மின் விளக்குகள், மின்விசிறிகள் நல்லமுறையில் இயங்க ஏதுவாகவும், சுகாதாரமான குடிநீரை ஒவ்வொரு தேர்வு அறை முன்பாக குடங்களில் வைக்கவும், தேர்வு மைய வளாகம், கழிவறைகள் போன்றவை எந்த நேரமும் தூய்மையாக வைத்திருக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வழித்தட அலுவலர்கள் மூலமாக வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு சென்று ஒப்படைக்கவும், தேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை வழித்தட அலுவலர்கள் மூலமாக விடைத்தாள் சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்கவும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தேர்வு சம்பந்தமான புகார்கள் ஏதேனும் இருப்பின் 1077 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com