தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன்

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. பேட்டி
தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன்
Published on

அந்தியூர்

தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நம்பிக்கை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன் என்று அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.

அந்தியூர் எம்.எல்.ஏ. பேட்டி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ. இ.எம்.ஆர். ராஜா சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்ட பின்னர் நேற்று அவருடைய தொகுதியான அந்தியூருக்கு வந்தார். பின்னர் தன்னுடைய பணிகளை பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் மேற்கொண்டார். பிறகு தொகுதி மக்களை சந்தித்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்தியூர் தொகுதி மக்களுக்கு நான் பணியாற்றவேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா என்னை தேர்ந்தெடுத்தார். நீங்களும் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்தீர்கள். உங்கள் விருப்பப்படி நான் பணியாற்றவேண்டும் அதற்காகதான் நான் சார்ந்துள்ள அணி வெற்றிபெற நான் வாக்களித்தேன்.

கோரிக்கைகளை நிறைவேற்றவே....

மேலும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அந்தியூர் தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடை நீரை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு கொண்டுவரவேண்டும். மேட்டூர் அணை நிரம்பி வழியும்போது அதன் உபரிநீரை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு கொண்டுவரவேண்டும். அந்தியூரில் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். இந்த கோரிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இந்த கோரிக்கைகளை நான் பதவியில் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும். அதனால்தான் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக வாக்களித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அந்தியூர் அ.தி.மு.க. நகர செயலாளர் மீனாட்சிசுந்தரம், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முனுசாமிநாயுடு, கூட்டுறவு சங்க தலைவர்கள் சரவணன், பாலுசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பெரியசாமி, வெள்ளியங்கிரி, முன்னாள் கவுன்சிலர்கள் குருராஜ், ராயண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com