

நாகப்பட்டினம்,
சாலைமறியல்
நாகை மாவட்டம் சிக்கல் மெயின்ரோட்டில் நாகை - திருவாரூர் சாலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரியும், 100 நாள் வேலையில் பிடித்தம் செய்யப்பட்டுள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் நாகை ஒன்றியக்குழு சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஜீவாராமன் தலைமை தாங்கினார். தலைவர் மாரிமுத்து, பொருளாளர் ராதா, ஒன்றியக்குழுவை சேர்ந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்து விவசாய தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் வேலையிழந்து வறுமையில் வாடும் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு மாதம் 30 கிலோ அரிசி வழங்க வேண்டும்.
நிவாரணம்
வறட்சியின் காரணமாக 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி வழங்குவதோடு, கூலி நாள் ஒன்றுக்கு ரூ.400 வழங்க வேண்டும். 100 நாள் வேலை செய்து மாத கணக்கில் வழங்கப்படாமல் உள்ள சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வறட்சியால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து சாலைமறியலின் போது வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நாகை தாசில்தார் தமீம்அன்சாரி, கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.