சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

நகர்ப்புற தேர்தல், பள்ளிகள் திறப்பு ஆகிய காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
Published on

கூடலூர்

நகர்ப்புற தேர்தல், பள்ளிகள் திறப்பு ஆகிய காரணங்களால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

ஊசிமலை காட்சிமுனை

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் முதுமலை புலிகள் காப்பகம், ஊசிமலை காட்சி முனை, பைக்காரா படகு இல்லம், நடுவட்டம் ஆங்கிலேயர் கால சிறைச்சாலை, நாடுகாணி தாவரவியல் சூழல் மேம்பாட்டு பூங்கா உள்ளிட்ட இடங்கள் உள்ளது. இங்கு சீசன் காலங்களில் கேரளா, கர்நாடகா சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாகன சவாரி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. பின்னர் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டது.

நேரடி வகுப்புகள்

இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் அனைத்து தரப்பு வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று கூடலூர் பகுதியில் உள்ள ஊசிமலை காட்சிமுனை உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வரத்து அதிகரித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் படிப்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இதனால் கூடலூர் பகுதியில் சுற்றுலா தலங்கள் களை இழந்து காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com