தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.
தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்
Published on

பென்னாகரம்,

தொடர் விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

சுற்றுலா தலம்

சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். இதனிடையே கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. இதனிடையே நேற்று மால 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

இந்த நிலையில் தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் ஐந்தருவி பகுதிக்கு சென்று செல்பி எடுத்தும், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை கண்டும் ரசித்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் கடைகள், உணவகங்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com